தேடுதல்

COP26 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் 11 வயது நிறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் Francesco Vera COP26 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் 11 வயது நிறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் Francesco Vera  (REUTERS)

காத்திருப்பதற்கு இனி நேரமில்லை – திருத்தந்தையின் டுவிட்டர்

"சுற்றுச்சூழல் நெருக்கடியினால், மிக அதிகமான மக்கள் துன்புறுகின்றனர். மனித குலம், தன்னையும், இயற்கையையும் பாதுகாக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க, துணிவான, துரிதமான முடிவுகள் தேவைப்படுகின்றன"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 3, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட இரு கருத்துக்களை, இரு டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டுள்ளார்.

"கிறிஸ்துவின் பாதையைப் பின்பற்ற, அன்பே மிக உன்னதமான சட்டம். அது, நமது வலுவற்ற நிலையை நாம் உணர்வதற்கும், மற்றவர்களின் வலுவற்ற, கடுமையான நிலைகளில் அவர்களோடு ஒன்றிணைந்திருக்கவும் உதவுகிறது" என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

"அடுத்தவரை தீர்ப்பிடும் சோதனைக்கு நாம் உள்ளாகும்போது, நமது வலுவற்ற நிலையைக் குறித்து சிந்திக்கவேண்டும். நம் சகோதரர்கள், சகோதரிகளை கண்டித்து திருத்துவதற்கு எது நம்மை உந்தித்தள்ளுகிறது என்ற கேள்வியை நமக்குள் நாமே எழுப்புவது நல்லது" என்ற சொற்களை, திருத்தந்தை, இப்புதனன்று, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் COP26, காலநிலை உச்சி மாநாட்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 2, இச்செவ்வாய் மாலையில் டுவிட்டர் செய்தியொன்றை பதிவு செய்தார்.

"காத்திருப்பதற்கு இனி நேரமில்லை. சுற்றுச்சூழல் நெருக்கடியினால், மிக அதிகமான மக்கள் துன்புறுகின்றனர். மனித குலம், தன்னையும், இயற்கையையும் பாதுகாக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க, துணிவான, துரிதமான முடிவுகள் தேவைப்படுகின்றன" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இதற்கிடையே, அக்டோபர் 31, ஞாயிறு மாலை, காலநிலை மாற்ற உச்சி மாநாடு COP26, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் துவங்கியதைக் குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பூமியின் அழுகுரலும், ஏழைமக்களின் அழுகுரலும் செவிமடுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுதலை அனைவரும் எழுப்புவோம் என்று விண்ணப்பித்தார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் COP26 மாநாடு, பலனளிக்கும் முடிவுகளை வழங்கும் எனவும், இந்த மாநாட்டின் வழியே, வருங்காலத் தலைமுறைகளுக்கு உறுதியான நம்பிக்கைகள் வழங்கப்படும் எனவும் தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

03 November 2021, 14:10