தேடுதல்

குழந்தைகளுடன் திருத்தந்தை குழந்தைகளுடன் திருத்தந்தை 

உலக குழந்தைகள் நாள், உலக இளையோர் நாள்

குழந்தைகளின் மாண்பையும் அடிப்படை உரிமைகளையும் நாம் மதித்து நடத்தும் விதமே, நாம் எத்தகைய முதிர்ச்சியுடன் நடக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 20ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக குழந்தைகள் நாள் குறித்தும், நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் சிறப்பிக்கப்பட உள்ள இளையோர் நாள் குறித்தும் இரண்டு டுவிட்டர் செய்திகளை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் எத்தகைய முதிர்ச்சியுடன் நடக்கிறோம், எத்தகையவர்களாக மாற விரும்புகிறோம், எத்தகைய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம் என்பது, நாம் குழந்தைகளை நடத்தும் விதம், அவர்களின் உள்ளார்ந்த மனித மாண்பையும், அடிப்படை உரிமைகளையும் மதித்தல் ஆகியவைகளில் வெளிப்படுகின்றது', என தன் முதல் டுவிட்டரில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், தன் இரண்டாவது டுவிட்டரில் இளையோர் பற்றிக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'புனித பவுலுக்கு இறைவன் விடுத்த அழைப்பு இன்று இளையோராகிய அனைவருக்கும் விடப்படுகிறது. எழுந்து நில்லுங்கள். உங்களைக் குறித்த வருத்தத்தில் தரையிலேயே விழுந்து கிடக்காதீர்கள், உங்களுக்குரிய மறைப்பணி காத்திருக்கிறது', என எடுத்துரைத்துள்ளார்.

இதற்கிடையே, உலக குழந்தைகள் நாளையொட்டி, ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுள் 14 கோடியே 90 இலட்சம் பேர் சத்துணவுப்பற்றாக்குறையால் துன்புறுகின்றனர் என்றும், உலகில் இன்று 16 கோடி குழந்தைகளும், வளர்இளம் பருவத்தினரும் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நவம்பர் 21, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 'கிறிஸ்து அனைத்துலக அரசர்' திருநாள், இவ்வாண்டு, முதல் முறையாக, இளையோர் உலக நாளாகவும், மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 36வது இளையோர் உலக நாளுக்கு, "எழுந்து நிமிர்ந்து நில். நீ கண்டதுபற்றி சாட்சியாக விளங்க உன்னை ஏற்படுத்துகிறேன்" (காண்க.தி.ப.26:16) என்பது மையக்கருத்தாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2021, 14:44