தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

'நற்செய்தியின் மகிழ்வு' 8ம் ஆண்டு – திருத்தந்தையின் டுவிட்டர்

"இயேசுவைச் சந்திக்கும் அனைவரது உள்ளங்களையும், வாழ்வையும் நற்செய்தியின் மகிழ்வு நிரப்புகிறது. அவர் வழங்கும் மீட்பைப் பெற்றுக்கொள்வோர், பாவம், துயரம், உள்மன வெறுமை, மற்றும், தனிமையிலிருந்து விடுதலைபெறுகின்றனர்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'நற்செய்தியின் மகிழ்வு' என்று பொருள்படும் Evangelii Gaudium என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு வெளியிட்ட முதல் திருத்தூது அறிவுரை மடலின் அறிமுக வரிகளை, நவம்பர் 24, இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

"இயேசுவைச் சந்திக்கும் அனைவரது உள்ளங்களையும், வாழ்வையும், நற்செய்தியின் மகிழ்வு நிரப்புகிறது. அவர் வழங்கும் மீட்பைப் பெற்றுக்கொள்வோர், பாவம், துயரம், உள்மன வெறுமை, மற்றும், தனிமையிலிருந்து விடுதலைபெறுகின்றனர்" என்று Evangelii Gaudium திருத்தூது அறிவுரை மடலில் பதிவாகியுள்ள அறிமுக சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதையத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் துவங்கிய 'நம்பிக்கையின் ஆண்டு' 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, கிறிஸ்து அரசர் திருநாளுடன் நிறைவுபெற்ற வேளையில், திருஅவையின் தலைமைப்பொறுப்பில் பணியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  Evangelii Gaudium திருத்தூது அறிவுரை மடலை வெளியிட்டார்.

அந்த மடல் வெளியான 8ம் ஆண்டு, நவம்பர் 24, இப்புதனன்று நிறைவு பெறுவதையொட்டி, #EvangeliiGaudium என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிடப்பட்டுள்ள இந்த டுவிட்டர் செய்தியில், இத்திருத்தூது மடலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிப்பதற்கு உதவியாக, வலைத்தள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது - https://www.vatican.va/content/francesco/en/apost_exhortations/documents/papa-francesco_esortazione-ap_20131124_evangelii-gaudium.html

திருப்பயணிகளுடன் திருத்தந்தை

மேலும், இத்தாலியின் ஒருசில பகுதிகளிலிருந்து, பெரும் எண்ணிக்கையில் புனித பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்த திருப்பயணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 24, இப்புதனன்று, மறைக்கல்வி உரையை வழங்கச் செல்வதற்கு முன், தனியே சந்தித்து, அவர்களை வாழ்த்தினார்.

மரியன்னையின் புதுமை பதக்கத்தை, இத்தாலியின் பல பகுதிகளில் மக்கள் நடுவே அறிமுகம் செய்துவரும் புனித வின்சென்ட் குழுமத்தைச் சேர்ந்த திருப்பயணிகள், மற்றும், புனித 2ம் யோவான் பவுல் கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோரை திருத்தந்தை சந்தித்து வாழ்த்தினார்.

அத்துடன், இத்தாலி நாட்டில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை எண்ணங்களும், அவற்றின் வெளிப்பாடுகளான செயல்களும், இவ்வுலகில், எப்போதும் அருவறுப்பானவை என்று கூறியதோடு, வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு இவ்வமைப்பினர் செய்துவரும் பணிகளைப் பாராட்டினார்.

24 November 2021, 13:42