தேடுதல்

அல்பேனிய பிரதமர் எடி ராமா அல்பேனிய பிரதமர் எடி ராமா  

திருத்தந்தை, அல்பேனியா பிரதமர் சந்திப்பு

அல்பேனியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரான்சிஸ்கன் துறவு சபை அருள்பணியாளர் Gjergj Fishta அவர்களின் மடல் ஒன்றை, அல்பேனியப் பிரதமர், திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அல்பேனிய நாட்டு பிரதமர் எடி ராமா (Edi Rama) அவர்கள், நவம்பர் 27, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் தனியே சந்தித்து கலந்துரையாடினார்,

இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், பன்னாட்டு உறவுகள் திருப்பீட துறையின் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் அல்பேனியப் பிரதமர் ராமா அவர்கள் சந்தித்தார்.

தன் குடும்பத்தினரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைத்து ஆசீர் பெற்ற அல்பேனியப் பிரதமர் எடி ராமா அவர்கள், திருவருகைக் கால நமதன்னை மற்றும், புனித பிரான்சிஸ் வண்ணப்படங்களையும், அல்பேனியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரான்சிஸ்கன் துறவு சபை அருள்பணியாளர் Gjergj Fishta அவர்களின் மடல் ஒன்றையும் திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார்.

திருத்தந்தையும், செம்பு கனிமத்தால் வடிவமைக்கப்பட்ட நோவா உருவம் ஒன்றையும், தனது அதிகாரப்பூர்வ வெளியீடுகளையும், செய்திகளையும் அல்பேனியப் பிரதமருக்கு அளித்தார்.

அல்பேனியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் சமுதாய நலப் பணிகள், பால்கன் பகுதியின் நிலவரம், அல்பேனியாவும், ஏனைய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

சந்திப்புக்கள்

மேலும், ஜிம்பாபுவே திருப்பீடத் தூதர் பேராயர் Paolo Rudelli, மத்திய மற்றும், மேற்கு ஐரோப்பாவின் பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராயர் Antonij, ஜெர்மன் குடியரசின் Trier ஆயர் Stephan Ackermann ஆகியோரும், நவம்பர் 27, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2021, 15:25