தேடுதல்

நமக்காக இறைவேண்டல் செய்துகொண்டிருக்கும் முன்னாள் திருத்தந்தை

'உண்மையின் ஒத்துழைப்பாளர்கள்' என்ற தன் விருதுவாக்குக்கு உண்மையுள்ளவராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் இருந்துவந்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பெயரால் உருவாக்கப்பட்ட இராட்சிங்கர் விருதிற்கு, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவ்விருதுகளை வழங்கி, உரை ஒன்றும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டு இவ்விருதுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, விருதுகளைப் பெற இயலாமல் இருந்த Jean-Luc Marion, Tracey Rowland ஆகியோருக்கும், இவ்வாண்டின் விருதுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட Hanna-Barbara Gerl-Falkovitz, Ludger Schwienhorst-Schönberger ஆகியோருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 13, இச்சனிக்கிழமை, இவ்விருதை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விழாவில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பது, கலாச்சார உலகிற்கு திருஅவை தொடர்ந்து ஆற்றிவரும் சேவையின் எடுத்துக்காட்டாக உள்ளது என தெரிவித்தார்.

விருது பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவது மட்டுல்லாமல்,  நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவரை எல்லாக் கண்டத்தையும் சேர்ந்த 15 நாடுகளைச் சார்ந்தோர் இவ்விருதைப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இறைச்சாயலில் படைக்கப்பட்ட மனிதனில், அறிந்துகொள்வதற்கும், படைப்பதற்கும் எல்லைகளின்றி இருக்கும் மனித மனமும், உணர்வு நிலைகளும், பொருட்களை உருமாற்றம் செய்வதற்கும், புதியவைகளை வரலாற்றில் படைப்பதற்கும் இட்டுச்செல்வதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்விக்கென தன்னை அர்ப்பணித்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் இவ்விருது வழங்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், சில மாதங்களுக்கு முன்னர், தன் அருள்பணியாளர் திருநிலைப்பாட்டின் 70ம் ஆண்டைச் சிறப்பித்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வி, ஆய்வுகள், எழுத்துப்பணி, சமூகத்தொடர்பு என்பவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துள்ள முன்னாள் திருத்தந்தை, நமக்காக தொடர்ந்து இறைவேண்டல் செய்துகொண்டிருக்கிறார் என்பதில் உறுதியுடன் இருப்போம் என கேட்டுக்கொண்டார்.

Munich நகரின் பேராயராக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர் எடுத்துக்கொண்ட 'உண்மையின் ஒத்துழைப்பாளர்கள்' என்ற விருதுவாக்குக்கு உண்மையுள்ளவராக அத்திருத்தந்தை, தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வந்துள்ளார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே விருதுவாக்கு, அத்திருத்தந்தையின் பெயரிலான இவ்விருதைப் பெறுபவரிலும் நிலவவேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் உரைத்தார்.

நம் ஒவ்வொருவர் வாழ்வின் நடவடிக்கைகளிலும் 'உண்மையின் ஒத்துழைப்பாளர்' என்ற வாக்கியம், தூண்டுதலைத் தரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாக்கியத்தை அனைவரின் செயல்பாட்டிற்கும் முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2021, 14:44