தேடுதல்

Vatican News
திருஇதய பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 051121 திருஇதய பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 051121  (Vatican Media)

திருஅவைப் பணியின் வருங்காலம், கல்விநிறுவனங்களைச் சார்ந்தது

திருத்தந்தை : அனைத்து கல்விநிலையங்களும், உரையாடல்களை ஊக்குவிப்பதுடன், ஏழைகளுக்கு முதலிடம் கொடுத்து செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றையும், திருத்தந்தையரும், இத்தாலிய ஆயர்களும், அப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ள படிப்பினைகளையும் உள்ளடக்கிய நூல் ஒன்றிற்கு அணிந்துரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வித்துறைக்கு திருஅவை ஆற்றிவரும் பணிகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

'திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திற்கு திருஅவையின் அதிகாரப்பூர்வப் படிப்பினைகள்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் அணிந்துரையில், திருத்தந்தை, 1921ம் ஆண்டு, அருள்பணி அகொஸ்தீனோ ஜெமெல்லி அவர்களால் துவக்கப்பட்ட திருஇதய பல்கலைக்கழகம், முதல் நூற்றாண்டைக் கொண்டாடிவரும் இவ்வேளையில், ஒவ்வொரு தலைமுறையின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டுவரும் கல்விக்கு, திருஅவை ஆற்றிவரும் பணிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

இளையோரின் திறமைகள் கனி தரவும், அதன் வழி பொதுநலனுக்குப் பங்காற்ற உதவும் நோக்கத்தில், கல்வித்துறையில் அர்ப்பணத்துடனும், பணிவுணர்வுடனும் திருஅவை மேற்கொண்டுவரும் கல்விப்பணிக்குறித்து, தன் அணிந்துரையில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு திருத்தந்தையர் வழங்கியுள்ள படிப்பினைகள், இத்தாலியச் சமூகத்திற்கும் திருஅவைக்கும் இடையேயான உறவுகளில் தங்கள் அடிப்பைடையைக் கொண்டுள்ளன எனவும் எடுத்துரைத்துள்ளார்.

கலாச்சார ஆய்வுகள், கிறிஸ்தவ உருவாக்கல்கள், புனிதத்துவத்தின் பாதைகள் ஆகியவைகளின் உண்மை பயிற்சிக்கூடமாக இருக்கும் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், விசுவாசத்திற்கும், இயற்பியலுக்கும், இறையியலுக்கும், அறிவுக்கும், ஆன்மீகத்திற்கும், பகுத்தறிவு கூறுகளுக்கும், என ஒவ்வொன்றிற்கும் இடையே இருக்கும் கூட்டுறவின் ஒளிர்மிகு எடுத்துக்காட்டாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் அழைப்பு மற்றும் பணியின்  வருங்காலம், கல்வி நிறுவனங்களைச் சார்ந்துள்ளது என்பதை அனைத்து கத்தோலிக்க பல்கலைக்கழகங்களுக்கும் நினைவூட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துக் கல்வி நிலையங்களும், அனைத்து கல்விநிலையங்களும், உரையாடல்களை ஊக்குவிப்பதுடன், ஏழைகளுக்கு முதலிடம் கொடுக்கும் திருஅவையின் அணுகுமுறைக்கு ஏற்ப செயல்படவேண்டும் எனக் கூறியுள்ளார்.

'திருஇதயப் பல்கலைக்கழகத்திற்கு திருஅவையின் அதிகாரப்பூர்வப் படிப்பினைகள்', என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் முதல் பிரதி, நவம்பர் 24ம் தேதி, புதன்கிழமை, புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், ஆயர் Claudio Giuliodori, மற்றும் இப்பல்கலைக்கழக அதிபர் Franco Anelli ஆகியோரால், திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது.

25 November 2021, 14:20