தேடுதல்

மில்வாக்கி வன்முறையில் இறந்தோருக்காக அஞ்சலி மில்வாக்கி வன்முறையில் இறந்தோருக்காக அஞ்சலி 

மில்வாக்கி நகரின் வன்முறை – திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

மில்வாக்கி நகரின் வன்முறை நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், தீமையை நன்மையால் வெல்வதற்குத் தேவையான மன உறுதியைப் பெறுவதற்கு, தொடர்ந்து செபித்து வருகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் விஸ்கான்சின் மாநிலத்தில், மில்வாக்கி நகரின் புறநகர் பகுதியில், நவம்பர் 21, கடந்த ஞாயிறு நடைபெற்ற தாக்குதலில் இறந்தோரைக் குறித்து, தன் வேதனையையும், செபத்தையும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இந்தத் தந்தியில், இறந்தோரின் நிறையமைதிக்காக செபிக்கும் திருத்தந்தை, தங்கள் உறவுகளை இழந்து துன்புறுவோருடன், தன் அருகாமையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த வன்முறை நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், தீமையை நன்மையால் வெல்வதற்குத் தேவையான மன உறுதியைப் பெறுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து செபித்து வருவதாக, தன் தந்திச் செய்தி வழியே கூறியுள்ளார்.

நவம்பர் 21, ஞாயிறு பிற்பகலில், மில்வாக்கி நகரின் Waukesha புறநகர் பகுதியில், கிறிஸ்மஸ் காலத்தின் ஆரம்பத்தைக் கொண்டாடும்வண்ணம் நடைபெற்ற ஓர் அணிவகுப்பில் கலந்துகொண்டோர் நடுவே, ஒருவர், தன் வாகனத்தை ஓட்டிச்சென்றதால், ஐந்து பேர் இறந்தனர், 48 பேர் காயமுற்றனர்.

இந்த வாகனத்தை ஒட்டிச்சென்றவரைக் கைது செய்துள்ள காவல் துறையினர், குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சண்டையால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டுனர், அந்த ஆத்திரத்தில் இந்த வன்முறையை மேற்கொண்டார் என்றும், அவருக்கும், அந்த அணிவகுப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் கூறியுள்ளனர்.

இந்த வன்முறை நிகழ்வைக் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட மில்வாக்கி உயர் மறைமாவட்ட பேராயர் ஜெரோம் லிஸ்டெக்கி (Jerome Listecki) அவர்கள், இந்த வன்முறை நிகழ்ந்த Waukesha புறநகர் பகுதியில் வாழும் அனைத்து மக்களோடு, தானும், இந்த வேதனையில் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.

இந்த வன்முறையில் காயமுற்றோரில் ஒருவர், அருள்பணியாளர் என்றும், இந்த அணிவகுப்பில் பங்கேற்ற கத்தோலிக்க பள்ளிக் குழந்தைகளும், பங்கு மக்களும் காயமுற்றுள்ளனர் என்றும், தன் செய்தியில் கூறியுள்ள பேராயர் லிஸ்டெக்கி அவர்கள், Waukesha புறநகர் பகுதியில் வாழும் அனைத்து மத நம்பிக்கையாளர்களும் தங்களோடு இணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2021, 13:58