தேடுதல்

ஹெயிட்டி நாட்டில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாடு ஹெயிட்டி நாட்டில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாடு 

ஹெய்ட்டி நாடு தனிமையில் விடப்படக்கூடாது

கிளாஸ்கோவில் துவங்கியுள்ள காலநிலை மாற்ற நெருக்கடிகள் குறித்த கருத்தரங்கு, வருங்காலத் தலைமுறைகளுக்கு உறுதியான நம்பிக்கைகளை வழங்கட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வியட்நாம், மற்றும் இத்தாலியின் சிசிலி தீவில் வெள்ளப்பெருக்கால் துயருறும் மக்களுடன் அருகாமையையும், ஹெய்ட்டி நாட்டில் குற்றக்கும்பல்களால் வன்முறைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு அரசின் பாதுகாப்பையும், காலநிலை மாற்ற நெருக்கடிகளுக்கு COP 26 கருத்தரங்கு சரியான தீர்வுகளை முன்வைக்கவேண்டும் என்ற ஆவலையும், மூவேளை செப உரையின் பின் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 31, ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் இந்த வேண்டுதல்களை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வியட்நாமில் வெள்ளப்பெருக்கால் ஒருவர் உயிரிழந்து 7000க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டு, துன்புறும் மக்களை நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாகவும், இம்மக்களுடன் பணியாற்றிவரும் சமுதாய மற்றும் திருஅவைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில், இத்தாலியின் சிசிலி தீவின் கிழக்குப் பகுதியில் மத்தியத்தரைக் கடல் சுறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தன் செபங்களை சமர்ப்பிப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

ஹெய்ட்டி நாட்டு அரசுத்தலைவர் Jovenel Moise படுகொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் அமைதிக்காக, உலக நாடுகள் உதவவேண்டும் எனவும், அந்நாடு தனிமையில் விடப்படக்கூடாது எனவும், அனைத்து மக்களும் அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்யுமாறும் விண்ணப்பித்தார்.

அண்மையில், 17 மறைபரப்புப் பணியாளர்கள் ஹெயிட்டி நாட்டில் சக்தி வாய்ந்த கும்பலால் கடத்தப்பட்டு, 1 கோடியே 70 இலட்சம் டாலர் பிணையத்தொகைக் கேட்டு பேச்சவார்த்தைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இஞ்ஞாயிறு மாலை, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் துவங்கியுள்ள காலநிலை மாற்ற நெருக்கடிகள் குறித்த கருத்தரங்கு குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, இப்பூமியின் அழுகுரலும், ஏழைமக்களின் அழுகுரலும் செவிமடுக்கப்பட வேண்டும் என, அனைவரும் செபிப்போம் எனவும் விண்ணப்பித்தார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கருத்தரங்கு பலனுடைய பதிலுரைகளை வழங்கும் எனவும், வருங்காலத் தலைமுறைகளுக்கு உறுதியான நம்பிக்கைகள் வழங்கப்படும் எனவும் தான் நம்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Laudato si’ திருமடலை மையமாகக் கொண்டு, பங்களாதேஷ் புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியொன்று, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது குறித்தும், சனிக்கிழமையன்று ஸ்பெயின் நாட்டின் Tortosa நகரில், நான்கு இறையடியார்கள் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டது குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2021, 14:45