தேடுதல்

"Retrouvaille" உலகளாவிய அமைப்பினர் சந்திப்பு "Retrouvaille" உலகளாவிய அமைப்பினர் சந்திப்பு 

தம்பதியர் பிரச்சனையிலிருந்து மீண்டுவர உதவும் குழுவுக்கு பாராட்டு

குடும்பத்தில் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது அஞ்சத்தேவையில்லை, ஏனெனில் பிரச்சனைகள், நாம் வளர்ச்சியடைய உதவுகின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குடும்பத்தில் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது அஞ்சத்தேவையில்லை, ஏனெனில் பிரச்சனைகள், நாம் வளர்ச்சியடைய உதவுகின்றன என்று, நவம்பர் 06, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் தன்னைச் சந்திக்கவந்திருந்த "Retrouvaille" என்ற உலகளாவிய அமைப்பின் உறுப்பினர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரச்சனைக்குள் வீழ்ந்துவிட்டால், அது இதயத்தை இறுக்கமுள்ளதாக ஆக்கிவிடும் என்றும், பிரச்சனையை எதிர்கொள்ளும்போது அது சற்று ஆட்டம்கொள்ள வைக்கின்றது, ஆயினும் அதிலிருந்து வெளிவரும்போது, முந்தைய நிலையைவிட இன்னும் சிறந்தவர்களாக மாறுகிறோம் என்றும், இதனால் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும் திருத்தந்தை கூறினார்.

குடும்ப வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு உதவுகின்ற, "Retrouvaille" என்ற பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த ஏறத்தாழ 600 பிரதிநிதிகளுக்கு, வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறியத் திருத்தந்தை, "அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு" சிறப்பிக்கப்பட்டுவரும் இக்காலக்கட்டத்தில், அவர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று இந்த அமைப்பினரிடம் கூறினார்.

அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலில், குடும்பத்தில் எதிர்படும் பிரச்சனைகளுக்கென்றே (காண்க. 232-238) ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளேன் என்றுரைத்த திருத்தந்தை, மக்களின் பிரச்சனைகள், உடலளவிலும் மனத்தளவிலும் காயங்களை உருவாக்குவதால், அவை பற்றி தான் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறினார்.

பிரச்சனை, வாய்ப்பு ஆகிய இரு சொற்களை மையப்படுத்தி முதலில் உரையாற்றிய திருத்தந்தை, பிரச்சனைகள், சாபமல்ல, மாறாக அவை வாழ்வுப் பயணத்தின் ஓர் அங்கம் என்பதற்குச் சான்றுபகரும் தம்பதியர், இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றனர் என்றும், பிரச்சனைகள் வழியாக காயமடைந்து, அவற்றிலிருந்து குணம் அடைந்தவர்களே, அவ்வாறு வாழ்பவர்க்கு நன்றாக உதவமுடியும் என்றும் கூறினார்.

குடும்பப் பிரச்சனைகளிலிருந்து குணமடைவது ஒரு கொடை என்றுரைத்த திருத்தந்தை, இந்தக் கொடையைப் பெற்று, மற்றவருக்குப் பணியாற்றுகின்ற அனைவரையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

"Retrouvaille" உலகளாவிய அமைப்பினர் சந்திப்பு
"Retrouvaille" உலகளாவிய அமைப்பினர் சந்திப்பு

உடன்பயணித்தல்

மேலும், அருள்பணியாளர்கள், தங்கள் மேய்ப்புப்பணியில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தம்பதியரோடு உடன்பயணித்து, அவர்கள் அவற்றிலிருந்து வெளிவர உதவவேண்டும் என்றும், இம்மேய்ப்புப்பணியில் தம்பதியர், பிரச்சனையிலுள்ள மற்ற தம்பதியருக்கு நெருக்கமாக இருந்து உதவுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஒருவர் தன்னையே கண்டுணர்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கும் "Retrouvaille" என்ற உலகளாவிய அமைப்பு, திருமண வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சனையால் காயப்பட்டு உறவை முறித்துக்கொள்ள இருக்கின்ற, அல்லது ஏற்கனவே மணமுறிவில் உள்ள, அல்லது அரசு முறைப்படி மணமுறிவு பெற்றுள்ள தம்பதியர், தங்களின் அன்புறவை மீண்டும் கட்டியெழுப்ப உதவி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2021, 14:51