திருத்தந்தையின் நவம்பர் மாத இறைவேண்டல் கருத்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
அயர்ச்சி, மனச்சோர்வு போன்றவைகளால் துயர்களை அனுபவிக்கும் மக்களுக்காக இந்த நவம்பர் மாதத்தில் சிறப்பானவிதத்தில் இறைவேண்டல் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அதிகப்படியான பணி, பணித்தொடர்புடைய மனஅழுத்தம் போன்றவை, பலரின் மனச்சோர்வுக்கு காரணமாகியுள்ளன என, தன் நவம்பர் மாத செபக்கருத்தில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனால் இவர்கள் மனதளவிலும், உணர்வளவிலும், உடலளவிலும் சோர்வை சந்திக்கின்றனர் என கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் தன் இறைவேண்டல் கருத்துக்களை, காணொளிச்செய்தி வடிவில் வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நவம்பர் மாத செய்தியில், இன்றைய வாழ்வின் கடினமான சுழற்சிநிலைகளின் சோர்வால், கவலைகளும், அக்கறையின்மைகளும், ஆன்மீகச் சோர்வுகளும் பிறந்துள்ளன எனக் கூறியுள்ளதுடன், மனச்சோர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோருக்கு அருகிருந்து, அவர்களின் வாழ்வில் நம்பிக்கையூட்ட முயலவேண்டும் என விண்ணபித்துள்ளார்.
மனச்சோர்வுக்கு உள்ளாகியிருப்போர், வாழ வழிதேடி அலைவோர், நம்பிக்கையிழந்தோர் ஆகியோருக்கு வெறும் வார்த்தைகளால் ஆறுதல் சொல்வதை தவிர்த்து, முதலில் அவர்களின் குரலுக்கு செவிமடுக்க முன்வருவோம், எனற அழைப்பையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனதளவில் இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் அதேவேளை, 'சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்,' என்ற இயேசுவின் வார்த்தைகளையும் கவனத்தில் கொள்வோம் என தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்மைச் சுற்றியிருப்போருக்காக செபித்து, அவர்கள், தங்கள் வாழ்வை ஏற்றுநடத்த உதவியாக இருப்போம் என்ற விண்ணப்பத்துடன், தன் செய்தியை, நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.
அண்மை புள்ளிவிவரங்களின்படி, இன்றைய உலகில், ஏறத்தாழ 11 விழுக்காட்டினர், அதாவது, 79 கோடியே, 20 இலட்சம் பேர், மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள், 3 முதல், 4 விழுக்காட்டினர், இந்நோயைப் பெறுவதற்கு, மனச்சோர்வு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. மக்கள் தற்கொலைகளை நாடுவதற்கு, இந்த மனச்சோர்வும் ஒரு காரணமாக உள்ளது எனக்கூறும் அறிக்கையொன்று, உலகில் ஒவ்வோர் ஆண்டும், 7 இலட்சம் பேர் தற்கொலை புரிவதாகவும், 15 முதல், 29 வயதுக்குட்பட்டோரில், தற்கொலை முயற்சிகள் அதிகமாக இருப்பதாகவும் அறிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்