தேடுதல்

யுனெஸ்கோவின் 75 ஆண்டுகால பணிக்கு திருத்தந்தை வாழ்த்து

மக்களிடையே ஒருமைப்பாடு, அமைதி, மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மனிதகுல கலாச்சர பாரம்பரியங்களுக்கு பாதுகாப்பு ஆகியவைகளில் யுனெஸ்கோவுடன் திருப்பீடம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, 75 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதையொட்டி, அவ்வமைப்பின் அனைத்து பணியாளர்களுக்கும் காணொளிவழி, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி, இந்தியா உட்பட 44 நாடுகளின் முயற்சியால் துவக்கப்பட்ட ஐ.நாவின் யுனெஸ்கோ நிறுவனம், 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, அந்நிறுவனத்திற்கு வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, இவ்வுலகிற்கு அந்நிறுவனம் ஆற்றியுள்ள அனைத்துப் பணிகளுக்கும் தன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

நற்செய்திக்கு பணிபுரியவே திருஅவை உள்ளது, அதேவேளை, நற்செய்தியே உலக வரலாற்றில் மிகப்பெரும் மனிதாபிமானமாக்கும் செய்தி என்பதையும் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வு, விடுதலை, மற்றும் நம்பிக்கையின் இச்செய்தி, எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் மனித குலத்திற்கான அனைத்துக் கல்வி முயற்சிகளுக்கும், அறிவியல் முயற்சிகளுக்கும், கலாச்சார வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக இருந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே, ஐ.நா.வின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார நிறுவனத்துடன் திருப்பீடமும், மக்களிடையே ஒருமைப்பாடு, அமைதி, மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மனிதகுல கலாச்சர பரம்பரியங்களுக்கு பாதுகாப்பு ஆகியவைகளுக்காக இணைந்து பணியாற்றுகிறது என, மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரத் துறையில் நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்து, அதன் வழி உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் உருவாக்கும் நோக்கத்தில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி, இலண்டன் கூட்டத்தில் UNESCO நிறுவனம் உருவாக்கப்பட்டது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2021, 14:52