தேடுதல்

மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் - கோப்புப் படம் 2016 மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் - கோப்புப் படம் 2016 

இறைவனின் குரலுக்கும், இறைமக்களின் குரலுக்கும் செவிமடுக்க...

திருத்தந்தை : தலத்திருஅவைகள், ஒருவர் மற்றவருக்கு செவிமடுப்பவர்களாக, புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி அணுகுமுறைகளில் படைப்பாற்றலுடன் செயல்படட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கரீபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலத்திருஅவைகள் இணைந்து நடத்தும் முதல் திருஅவைக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தலத்திருஅவைகள் ஒருவர் மற்றவருக்கு செவிமடுப்பவர்களாக, புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி அணுகுமுறைகளில் படைப்பாற்றலுடன் செயல்படுமாறு, தலத்திருஅவைகளுக்கு அனுப்பியுள்ள செய்தியில் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2023ம் ஆண்டில் இடம்பெற உள்ள ஆயர் மாமன்றத்திற்கு தயாரிப்பதற்கு உதவியாக, மூன்று முக்கியத் தலைப்புகளையும், இரண்டு பரிந்துரை தலைப்புகளையும் முன்வைத்துள்ளார்.

மெக்சிகோ நகரில் நேரடி பங்கேற்புடனும், இணையவழி தொடர்புடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் திருஅவைக் கூட்டத்திற்கு, ஒன்றிப்பு, பங்கேற்பு, மற்றும் மறைப்பணி என்ற மூன்று தலைப்புக்களில், திருத்தந்தை, தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

2031ம் ஆண்டு, குவாதலூப்பே யூபிலி கொண்டாட்டங்கள், 2033ம் ஆண்டு, மீட்பின் யூபிலி, ஆகியவைபற்றி விவாதிக்க, 2007ம் ஆண்டு இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் கூட்டம் இடம்பெற்றதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு கொண்டாட்டங்களுக்கு முன்னர், அகில உலகத் திருஅவையில் இடம்பெறும் ஆயர் மாமன்றக்கூட்டம், சில அமைப்புமுறை மாற்றங்களுக்கும், திருமுழுக்குப்பெற்ற அனைவரின் குரலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை நோக்கம் கொண்டதாக இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

திருஅவை அங்கத்தினர்கள், செவிமடுத்தலில் முக்கியக் கவனம் செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய செவிமடுத்தல், கலந்துரையாடலையும், தெளிந்து தேர்தலையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் எனவும், இறைவனின் குரலுக்கு செவிமடுக்கும்போது, அதனோடு இணைந்து, இறைமக்களின் குரலுக்கும் நாம் செவிமடுக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

நம்மிடையே காணப்படும் வேறுபாடுகள் பிரிவினைக்கு இட்டுச் செல்லாமல் இருக்கும் வகையில், செபம், கலந்துரையாடல், தெளிந்து தேர்தல் போன்றவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக, தூய ஆவியாரின் படைப்பாற்றல் மிக்க பெரும் அன்பின் வெளிப்பாடாக, இலத்தீன் அமெரிக்கா, மற்றும் கரீபியன் தலத்திருஅவைகளின் இந்த ஒருவாரக் கூட்டம் விளங்கட்டும் என, மேலும் வாழ்த்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2021, 14:24