தேடுதல்

வலெந்தினா அலாஸ்ராகி, பிலிப் புலெல்லாவுக்கு விருது வழங்கும் நிகழ்வு  வலெந்தினா அலாஸ்ராகி, பிலிப் புலெல்லாவுக்கு விருது வழங்கும் நிகழ்வு  

பத்திரிகையாளர்கள், உலகின் இருளைக் குறைப்பதற்கு அர்ப்பணிக்க..

இறைவார்த்தையை உலகத்திற்குக் கொணரவும், அனைவருக்கும் வழங்கப்படும் இயேசுவின் இரக்கத்தை எடுத்துச்செல்லும் வாகனமாகச் செயல்படவும் திருஅவை உள்ளது - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையரின் திருத்தூதுப் பயணங்கள், திருத்தந்தையர் நிகழ்த்தும் நிகழ்வுகள், திருவழிபாடுகள், திருப்பீடம், வத்திக்கான் மற்றும், கத்தோலிக்கத் திருஅவை பற்றிய தகவல்களை சிறப்பாக வழங்கிவந்த Valentina Alazraki, Philip Pullella ஆகிய இரு வத்திக்கான் பத்திரிகையாளர்களுக்கு, Grand Cross என்ற மிக உயரிய பாப்பிறை விருதை வழங்கி பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Valentina Alazraki, Philip Pullella

திருத்தந்தை 4ம் பயஸ் அவர்களின் Grand Crossன் “Dame' என்ற விருதைப் பெற்றுள்ள Valentina Alazraki அவர்கள், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், 1974ம் ஆண்டில் பத்திரிகைத் துறையில் பணியைத் துவக்கியவர். மெக்சிகோ நாட்டவரான இவர், Noticieros தொலைக்காட்சிக்கும், W வானொலிக்கும் பணியாற்றி வருகிறார். Grand Crossன் 'Knight' என்ற விருதைப் பெற்றுள்ள Philip Pullella அவர்கள், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் தலைமைப்பணிக் காலத்திலிருந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகப் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். 1983ம் ஆண்டில் Reuters ஊடகத்தில் பணியில் சேருவதற்குமுன், United Press International நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறார்.  

பத்திரிகைத் துறையில் வல்லுனர்களாக விளங்கிவந்த இவ்விருவரோடு, இவ்விருது வழங்கும் நிகழ்வுக்காக, வத்திக்கானில் தன்னை சந்திக்க வந்திருந்த ஏறத்தாழ 180 பத்திரிகையாளர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலெந்தினா அவர்களையும், பிலிப்பு அவர்களையும் கவுரவிப்பதன் வழியாக, பத்திரிகைத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் தனது மரியாதையைச் செலுத்துவதாகக் கூறினார். 

திருத்தந்தை, உங்கள் மீது அன்புகொண்டிருக்கிறார், உங்களை விலைமதிப்பற்றவர்களாக நோக்குகிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்திரிகையியல், ஒரு தொழில் அல்ல, மாறாக அது ஒரு பணி எனவும் கூறினார்.

சிறந்த பத்திரிகையியலின் முக்கிய பண்புகளை வெளிப்படுத்தும், செவிசாய்த்தல், ஆழ்ந்து ஆராய்தல், கதை சொல்லுதல் ஆகிய மூன்று வினைச்சொற்கள் பற்றிக் கூற விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, அவற்றை ஒவ்வொன்றாக விளக்கினார்.

செவிசாய்த்தல், பத்திரிகையாளர்களுக்கு முக்கியமாக இருப்பது போன்று, திருஅவைக்கு, குறிப்பாக, மாமன்றத்திற்குத் தயாரிப்புக்களைத் துவக்கியிருக்கும் திருஅவைக்கு அது முக்கியம் என்றுரைத்த திருத்தந்தை, பத்திரிகைத் தொழில் மிகவும் கடினமானது எனினும், நன்றாகச் செவிசாய்த்தல், மற்றும், நிகழ்வுகளைப் பார்த்து ஆழ்ந்து ஆராய்தல் ஆகியவற்றிற்கு நேரம் தேவை என்று கூறினார்.

கதை சொல்லுதல்

திருஅவையில் இடம்பெறும் தவறுகள்பற்றிய செய்திகளை வெளியிட்டதற்கும், திருஅவை, கம்பளத்திற்குக்கீழ் ஒளிந்துகொள்ளாமல் இருப்பதற்கு உதவியதற்கும்,   திருஅவையில் சிலரின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சிறாருக்காக குரல் கொடுத்ததற்கும், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  திருஅவை, பாராளுமன்றத்தில் இருப்பதுபோல், இடது சாரி, வலது சாரி என்ற அமைப்பைக்கொண்ட அரசியல் நிறுவனம் அல்ல என்றும், தங்களின் உற்பத்திகளை எவ்வாறு சிறந்தமுறையில் விற்கலாம் என்று ஆய்வுசெய்யும் நிர்வாகிகளைக் கொண்ட பன்னாட்டு நிறுவனமும் அல்ல என்றும் உரைத்த திருத்தந்தை, திருஅவை தன் சொந்த திட்டத்தின் அடிப்படையில் கட்டப்படுவது அல்ல, தன் சொந்த சக்தியால் முன்னோக்கிச் செல்வதுமல்ல, விற்பனை யுக்திகளால் வாழ்வதுமல்ல என்றும், ஒவ்வொரு காலத்திலும் அது உலகப்போக்குச் சோதனைக்கு உட்படுகின்றது என்றும் கூறினார்.

சூரியனிலிருந்து நிலாவுக்கு ஒளி கிடைப்பதைப் போல, இயேசுவிடமிருந்து திருஅவைக்கு ஒளி கிடைக்கின்றது, அவ்வொளியைப்  பிரதிபலிப்பதற்காக திருஅவை உள்ளது என்றும், இறைவார்த்தையை உலகத்திற்குக் கொணரவும், அனைவருக்கும் வழங்கப்படும் இயேசுவின் இரக்கத்தை எடுத்துச்செல்லும் வாகனமாகச் செயல்படவும் திருஅவை  உள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.

உண்மையே விடுதலையளிக்கும் என்பதால், உண்மையைத் தேடுவதற்காகப் பணியாற்றும் உங்களுக்கு நன்றி என்று கூறி, தன் உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொதுவாக, திருப்பீடத்தோடு தொடர்புடைய பொதுநிலை அரசுத் தூதர்களுக்கு Knight of Grand Cross என்ற விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை, 1560ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் பயஸ் அவர்கள் நிறுவினார். அது இடையில் நிறுத்தப்பட்டு, 1847ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அதனை மீண்டும் துவக்கி வைத்தார். 1993ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2021, 15:13