தேடுதல்

Vatican News
அசிசி நகரில் தி்ருத்தந்தை பிரான்சிஸ் அசிசி நகரில் தி்ருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தை: அசிசி நகரில் 500 வறியோர் சந்திப்பு

சுற்றுச்சூழலுக்கு கேடு இழைக்காதவகையில் தயாரிக்கப்பட்ட தோள்பைகளில், 500 வறியோர் ஒவ்வொருவருக்கும் தேவையான குளிர்கால உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை திருத்தந்தை வழங்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருவழிபாட்டு ஆண்டின் 33ம் ஞாயிறாகிய, நவம்பர் 14, வருகிற ஞாயிறன்று திருஅவையில் கடைப்பிடிக்கப்படும் 5வது உலக வறியோர் நாளையொட்டி, நவம்பர் 12, இவ்வெள்ளி காலையில், இத்தாலியின் அசிசி நகர் சென்று, அந்நகரின் தூதர்களின் புனித மரியா (Santa Maria degli Angeli) பெருங்கோவிலில், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏறத்தாழ 500 வறியோரைச் சந்தித்து, அவர்களோடு சேர்ந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளி காலையில் வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட திருத்தந்தை, உள்ளூர் நேரம் 9 மணிக்கு அசிசி நகர் சென்றடைந்து, அந்நகரிலுள்ள புனித கிளாரா பெருங்கோவிலில் சிறிதுநேரம் இறைவேண்டல் செய்து, அங்கு, புனித கிளாரா ஆழ்நிலை துறவு இல்ல அருள்சகோதரிகளைச் சந்தித்தார்.

புனித கிளாரா ஆழ்நிலை துறவு இல்ல அருள்சகோதரிகள்
புனித கிளாரா ஆழ்நிலை துறவு இல்ல அருள்சகோதரிகள்

பின்னர் அங்கிருந்து தூதர்களின் புனித மரியா பெருங்கோவிலுக்கு வந்த திருத்தந்தை, அப்பெருங்கோவிலின் பெரிய வளாகத்தில் காத்திருந்த மக்களை, குறிப்பாக, சிறாரை ஆசிர்வதித்து, சிலருக்கு செபமாலைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வுக்காக, அசிசி நகருக்குத் திருப்பயணமாக நடந்தே வந்துள்ள வறியோருள் சிலர், ஒரு மேல்போர்வையையும், ஊன்றுகோலையும், வறியோரின் அடையாளச் சின்னங்களாக திருத்தந்தைக்கு அளித்தனர். அந்த ஊன்றுகோலுடன் வளாகத்தில் தொடர்ந்து நடந்துவந்த திருத்தந்தை, அப்பெருங்கோவிலுக்குள் அமைந்துள்ள அசிசி நகர் புனித பிரான்சிஸ் காலத்து சிற்றாலயத்தில் (Portiuncula) சிறிது நேரம் செபித்தார்.

அதன்பின்னர், அச்சிற்றாலயத்தின் முகப்பில் அமர்ந்திருந்த 500 வறியோர் பிரதிநிதிகள் சார்பாக, ஐந்து பேர் அளித்த சான்றுகளுக்குச் செவிமடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இவர்களில் பாதிப் பேர் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்தனர். இவர்கள் வீடற்றவர், வேலையற்றவர் மற்றும், புலம்பெயர்ந்தோர் ஆவர்.

இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 பேர், தங்கள் வாழ்வு குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கண்ணீரோடு பகிர்ந்துகொண்டனர். அதற்குப் பின்னர், திருத்தந்தை, தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். இறுதியில் ஓர் இறைவேண்டலோடு இந்நிகழ்வு நிறைவுபெற்றது.

பரிசுப்பொருள்கள்

மேலும், இந்நிகழ்வின் இறுதியில், சுற்றுச்சூழலுக்கு கேடு இழைக்காதவகையில் தயாரிக்கப்பட்ட 500 தோள்பைகளில், பல்வேறு குளிர்கால உடைகள், மற்றும் கோவிட் நோய் எதிர்ப்பு முகக்கவசங்கள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வைத்து, வறியோர் ஒவ்வொருவருக்கும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பின்னர், வீடற்றவர்களுக்கு புதிய இல்லம் ஒன்று அமைப்பதற்கென்று, Porziunculaவிலிருந்து எடுக்கப்பட்ட கல் ஒன்றை ஆசிர்வதித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளியன்று, அசிசி நகர் ஆயர் Domenico Sorrentino அவர்களுடன், வறியோர், மதிய உணவு விருந்திலும் கலந்துகொண்டனர்.

12 November 2021, 15:44