தேடுதல்

Vatican News
அமலமரி மறைப்பணித் தியாகிகள்  ஒத்துழைப்பாளர் சபை சந்திப்பு அமலமரி மறைப்பணித் தியாகிகள் ஒத்துழைப்பாளர் சபை சந்திப்பு  (Vatican Media)

கடவுளில் இதயத்தை பதித்து உலகில் மறைப்பணியாற்றுங்கள்

மறைப்பணித் தியாகிகள் ஒத்துழைப்பாளர் சபை துவக்கப்பட்டதன் 70ம் ஆண்டு மற்றும், அந்தச் சபை திருத்தந்தையின் அனுமதி பெற்றதன் 20ம் ஆண்டை முன்னிட்டு, அச்சபையினர் திருத்தந்தையைச் சந்தித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடவுளுக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்கள், எதற்கும் அஞ்சத் தேவையில்லை, மாறாக, அவர்கள், விளிம்புநிலைக்கு உட்பட்ட இடங்களையே தேடிச் செல்லவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20, இச்சனிக்கிழமையன்று, தன்னைச் சந்திக்க வந்திருந்த, ஒரு பொதுநிலை சபையினரிடம் கூறினார்.

வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில், அமலமரி மறைப்பணித் தியாகிகள் ஒத்துழைப்பாளர் என்ற, ஒரு பொதுநிலையினர் சபையின் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, பொதுநிலை அர்ப்பணிப்பு வாழ்வுமுறையை, துணிச்சலோடு ஏற்று, வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

மறைப்பணித் தியாகிகள் ஒத்துழைப்பாளர் சபை துவக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு மற்றும், அந்தச் சபை திருத்தந்தையின் அனுமதி பெற்றதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு, அச்சபையின் முப்பது பிரதிநிதிகள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையைச் சந்தித்து, ஆசீரும் ஊக்கமும் பெற்றனர்.

இதயத்தை கடவுளில் ஆழமாகப் பதித்து, நிறைந்த நம்பிக்கையோடு, உலகில் புளிக்காரமாக மறைப்பணியாற்றுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மாவு புளிப்பு தரும் அளவுக்கு அதன் தரம் இருக்கும் என்றும், வாழ்கின்ற இடங்களில், மனிதராக வாழ்ந்த இயேசுவைப்போன்று பணியாற்றவேண்டும் என்றும் கூறினார். 

மறைப்பணியாற்ற எப்போதும் தயாராக இருக்கவேண்டும், அப்பணியில் தியாக உணர்வோடு செயல்படவேண்டும், அன்னை மரியாவைப்போன்று, கடவுளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் என்றும், அமலமரி தியாகிகள் மறைப்பணி ஒத்துழைப்பாளர் அமைப்பிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

20 November 2021, 14:54