தேடுதல்

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் 

மனித சமுதாயத்தின் உண்மையான வெளிப்பாடு, உரையாடல்

“சந்திப்புக் கலாச்சாரம்” என்ற தலைப்பில், இம்மாதம் 8, 9 ஆகிய இரு தேதிகளில், உரோம் நகரில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகமும், “La Civiltà Cattolica” இதழ் அமைப்பும் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும், பல்வேறு மதங்களுக்கிடையே உரையாடலை ஊக்குவிக்கும் நோக்கத்தில், “சந்திப்புக் கலாச்சாரம்” என்ற தலைப்பில், இம்மாதம் 8, 9 ஆகிய இரு தேதிகளில் உரோம் நகரில் நடைபெறவிருக்கும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, தன் நல்வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினரின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகமும், இத்தாலியை மையமாகக்கொண்டு பிரசுரமாகும் இயேசு சபையினரின் “La Civiltà Cattolica” இதழ் அமைப்பினரும் இணைந்து நடத்தவுள்ள இக்கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள மடலில், சந்திப்புக் கலாச்சாரம்பற்றிய உரையாடல்களை ஊக்குவிப்பது, இக்காலத்திற்கு மிகவும் தேவையானது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

மனித சமுதாயத்தின் வருங்காலம்

நம் மனித சமுதாயத்தின் வருங்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதையும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயமும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், இப்பன்னாட்டு கருத்தரங்கின் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதையும் பாராட்டுவதாக, அம்மடலில் குறிப்பிட்டுள்ளார் ,திருத்தந்தை பிரான்சிஸ்.

நமது நவீன உலகம், தொடர்புகளால் நிறைந்திருந்தாலும், நாம் ஒருவர் ஒருவருக்குச் செவிசாய்க்கவும், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளவும் கஷ்டப்படுகிறோம் எனவும், மனித சமுதாயத்தின் உண்மையான வெளிப்பாடு, கலந்துரையாடல் எனவும், இதுவே, போட்டி நிலையை, ஒத்துழைப்பாக மாற்றுவதற்கு சரியான பாதை எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.    

மற்றவரின் உரிமைகள் மற்றும், அடிப்படை சுதந்திரங்களை ஏற்று, மதிப்புடன்கூடிய திறந்தமனத்தோடு அவர்களை அணுகுவதற்கு கல்வி வழங்க திருஅவை எல்லா வழிகளிலும் முயற்சிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இதுவே, வருங்காலத்தை ஒன்றிணைந்து அமைப்பதற்குரிய பாதையாகும் என்று கூறியுள்ளார்.

சந்திப்புக் கலாச்சாரம்

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகமும், “La Civiltà Cattolica” இதழும், சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க உதவுமாறும், இந்த முயற்சியில் தடைகளை எதிர்கொண்டாலும், அதில் துணிந்து செயல்படுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு அக்டோபர் 27ம் தேதி கையெழுத்திட்டு திருத்தந்தை அனுப்பிய இம்மடல், நவம்பர் 4, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இயேசு சபையினரின் மிகவும் புகழ்பெற்ற, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், 1789ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இத்தாலியை மையமாகக்கொண்டு பிரசுரமாகும் இயேசு சபையினரின் “La Civiltà Cattolica” இதழ் 1850ம் ஆண்டில் துவக்கப்பட்டது.  

05 November 2021, 15:31