தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை: நன்மைசெய்வதில் மனம்தளராதிருப்போம்

தூய ஆவியார் காட்டுகின்ற பாதையில் நடப்பது, நம்மைச் சுதந்திர மனிதர்களாக ஆக்குகின்றது - புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்பு இதயங்களே, திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், பதிவுசெய்துள்ள ஆழமான இறையியல் மற்றும், மேய்ப்புப்பணி கருத்துக்கள் பற்றிய தன் சிந்தனைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 14 தன் புதன் மறைக்கல்வியுரைகளில் வழங்கிவந்தார். நன்மைசெய்வதில் மனம்தளராதிருப்போமாக! என்று புனித பவுல் கலாத்தியரிடம் கேட்டுக்கொண்டதை மையப்படுத்தி, நவம்பர் 10, இப்புதனன்று மறைக்கல்வியுரையை வழங்கி, அம்மடல் பற்றிய மறைக்கல்வியுரைத் தொடரை நிறைவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். காலநிலையும் இதமாக இருக்க, இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பலருக்கு, ஐரோப்பிய மொழிகளிலும், அராபியத்திலும் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் 6ம் பிரிவிலிருந்து மூன்று இறைவசனங்கள் முதலில் வாசிக்கப்பட்டன. அதற்குப்பின், திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.

நன்மைசெய்வதில் மனம்தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். 10ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன்வருவோம்… சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென். (கலா.6,9-10.18).

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடல் பற்றிய நம் மறைக்கல்வியுரையை இன்று நிறைவுசெய்கிறோம். இறைவார்த்தை, அள்ள அள்ளக் குறையாத ஊற்று. புனித பவுல், இந்த மடலில், இயேசு கிறிஸ்துவின் வற்றாத வளங்களை, திருத்தூதராக, இறையியலாளராக, மேய்ப்பராக என, பல்வேறு முறைகளில் பேசியிருக்கிறார். அவர், உயிர்த்த ஆண்டவரை, தனிப்பட்டமுறையில் சந்தித்தது, சிலுவையில் கிறிஸ்து கொணர்ந்த வெற்றியால், பாவம் மற்றும், மரணத்திலிருந்து நமக்கு கிடைத்த விடுதலை மற்றும், நம் திருமுழுக்கில் தூய ஆவியாரால் நம்மீது பொழியப்பட்ட புதிய வாழ்வை துணிச்சலோடு அறிவிக்க அவரை இட்டுச் சென்றது. உண்மையான சட்டத்தின் நிறைவு, இயேசுவால் நமக்கு வழங்கப்பட்டுள்ள தூய ஆவியார் வழிநடத்தும் பாதையில் நடக்கும் வாழ்வில் உள்ளது. ஆவியாரின் வாழ்வை, விடுதலை உணர்வில் மட்டுமே வாழமுடியும். பிறரன்பே திருச்சட்டத்தின் நிறைவு. அது, கிறிஸ்தவ அன்பின் வழியை ஆர்வத்தோடு மேற்கொள்ளவும், தூய ஆவியாரின் கனிகளைப் பேணி வளர்த்துக்கொள்ளவும் நம்மை இட்டுச்செல்லவேண்டும் என்று, புனித பவுல் வலியுறுத்திக் கூறுகிறார். இதில், நம் குறைகள் அல்லது, நம்மில் வெளிப்படையான முன்னேற்றம் இல்லாதபோது, ஒருபோதும் நாம் மனம்தளரக்கூடாது. வாழ்க்கையில் மனம்சோர்வுற்று உணரும்போதும், அதில் எதிர்கொள்ளும் புயல்கள் நம்மை மூழ்கடிப்பதாய் அச்சுறுத்தப்படும்போதும், கிறிஸ்து நமக்குத் தேவைப்படுகிறார். அந்நேரங்களில் கிறிஸ்துவின் பிரமாணிக்கமுள்ள உடனிருப்பிலும், அவரது ஆவியாரின் வாழ்வளிக்கும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்து, நாம் அவரை நம் இதயங்களில் தட்டி எழுப்பவேண்டும். இவ்வாறு, புயல் நடுவே படகில் உறங்கும் கிறிஸ்துவின் திருவுருவம் நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று, புனித அகுஸ்தீன் சொல்லியுள்ளார். நற்செய்தியால் அறிவிக்கப்படும் புதியன, மகிழ்ச்சி, மற்றும், புதிய வாழ்வின் சுதந்திரத்தில் புனித பவுலோடு சேர்ந்து, தொடர்ந்து அகமகிழ்வோம்.

சோதனைகள் நம்மைப் பின்வாங்கச் செய்யும். அந்நேரங்களில் நாம் மனம்தளராமல், தூய ஆவியாரின் உதவியை நாடுவோம் என்று கேட்டுக்கொண்டு இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், நவம்பர் 11, இவ்வியாழனன்று சுதந்திர நாளைக் கொண்டாடும் போலந்து நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக் கூறிய திருத்தந்தை, இந்த நாள், கடவுள் மீதும், தாய் நாட்டின் மீதும், உடன் சகோதரர், சகோதரிகள் மீதும் அன்பை வளர்க்கத் தூண்டவேண்டும் என, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியிருப்பதையும் நினைவுபடுத்தினார். மேலும், இந்த நவம்பர் மாதத்தில் இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்கள், இறைவனின் இரக்கத்தைப் பெறுமாகச் செபிப்போம்  என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2021, 14:06