தேடுதல்

ஆப்கானிஸ்தான் செங்கல் சூளையில் தொழில் செய்யும் சிறுவன் ஆப்கானிஸ்தான் செங்கல் சூளையில் தொழில் செய்யும் சிறுவன் 

எதிர்காலத்தைத் திருடும் குழந்தைத் தொழில் - திருத்தந்தை

தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள இக்காலத்தில், குழந்தைகள் இன்னும் கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உழைப்பின் வழியே குழந்தைகளை வதைக்கும் கொடுமையைப் பற்றி இன்று சிந்திப்பது, இன்றைய காலத்திற்கும், வருங்காலத்திற்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட உறுப்பினர்களிடம் கூறினார்.

"குழந்தைத் தொழிலை ஒழித்தல், இன்னும் சீரிய எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, நவம்பர் 19, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில், நடத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு வழங்கிய உரையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

தொழில் நுட்ப புரட்சியும், குழந்தைத் தொழிலும்

தொழில் நுட்பத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட, 'நான்காவது தொழில் புரட்சிக்காலம்' என்று பெருமையாகக் கூறிவரும் இக்காலத்தில், குழந்தைகள் இன்னும் கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று திருத்தந்தை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

குழந்தைப்பருவத்திற்கே உரிய, கல்வி, விளையாட்டு ஆகியவை மறுக்கப்பட்டு, பல்லாயிரம் குழந்தைகள், தங்கள் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் இழக்கும்வண்ணம் உலகின் பல நாடுகளில் வதைபடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஓர் அநீதி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இல்லங்களில் குழந்தைகள் தங்கள் விருப்பத்துடன் செய்யும் சிறு, சிறு வேலைகளையும், கட்டாயத்தின் பேரில் குழந்தைகள் வெளி உலகில் செய்யும் தொழிலையும் இணைத்து குழப்பங்கள் எழக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இல்லங்களில் விருப்பப்பட்டு செய்யும் பணிகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன, ஆனால், வெளி உலகில், அவர்கள் மீது சுமத்தப்படும் கட்டாயத் தொழிலோ, அவர்கள் வளர்ச்சியை வேரறுக்கிறது என்று கூறினார்.

கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு உரை வழங்கிய திருத்தந்தை
கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு உரை வழங்கிய திருத்தந்தை

மனித சமுதாயத்தின் எதிர்காலம் திருடப்படுகிறது

குழந்தைகளை இவ்வாறு வதைப்பதன் வழியே, அவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் எதிர்காலமும் திருடப்படுகிறது என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித மாண்புக்கு மிகப்பெரும் அவமானமாக குழந்தைத் தொழில் அமைகிறது என்று மேலும் கூறினார்.

நாடுகளில் நிலவும் வறுமை, பட்டினி ஆகியவை, குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் கட்டாயத்திற்கு பெற்றோரை உட்படுத்துகின்றன என்று குறிப்பிட்ட திருத்தந்தை, தவறான முறையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இன்றைய பொருளாதாரத்தை மாற்றியமைத்து, வறுமையை ஒழிப்பதன் வழியே, குழந்தைத் தொழிலையும் ஒழிக்கமுடியும் என்று எடுத்துரைத்தார்.

சரிசமமான, தரமான கல்வியை வழங்க...

அத்துடன், உலகெங்கும், குழந்தைகள் அனைவருக்கும் சரிசமமான, தரமான கல்வியை வழங்க, அனைத்து அரசுகளும், பொதுநல நிறுவனங்களும் இணைந்து உழைப்பது மிகவும் முக்கியம் என்பதை,  தன் உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

மனித முன்னேற்றத்திற்காக, குறிப்பாக, குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் முயற்சிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருந்தொற்று உருவாக்கியுள்ள பிரச்சனைகளைகள் நடுவிலும், இந்த பன்னாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் அனைவருக்கும் தன் நன்றியையும் தெரிவித்தார்.

‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று இயேசு கூறிய சொற்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம் என்று கூறி, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2021, 14:22