தேடுதல்

Vatican News
பல்கேரியாவில் பேருந்து விபத்து பல்கேரியாவில் பேருந்து விபத்து   (REUTERS)

பல்கேரிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தை அனுதாபம்

திருத்தந்தை, ஈராக் நாட்டு தலைநகர் மருத்துவமனைக்கு வழங்கிய, மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி, நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளுக்கு உதவிவருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்கேரியாவில் நவம்பர் 23, இச்செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 46 பேர் உயிரிழந்தது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, திருத்தந்தையின் பெயரால், இரங்கல்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உயிரிழந்தோரில் பெரும்பான்மையினோர் வட மாசிடோனியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், வட மாசிடோனியா குடியரசுத் தலைவர் Stevo Pendarovski அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், குழந்தைகள் உட்பட, எண்ணற்றோர் உயிரிழந்துள்ள, மற்றும் காயமுற்றுள்ள இந்த விபத்து குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ள திருத்தந்தை, அவர்களுக்காக செபிப்பதாகவும், இறை ஆறுதலையும், அமைதியையும் அவர்களுக்காக வேண்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாசிடோனியாவைச் சேர்ந்தவர்களை, பெரும்பான்மையினராகக் கொண்டு, வாரக்கடைசி சுற்றுலாவை துருக்கியின் Istanbulல் முடித்துக்கொண்டு திரும்பிய பேருந்து ஒன்று, பல்கேரியாவில் விபத்துக்குள்ளாகி எரிந்ததில், 12 குழந்தைகள் உட்பட, 46 பேர் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர்.

எரிந்துகொண்டிருந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்து, நான்கு ஆண்கள், 3 பெண்கள் உட்பட 7 பேர் மட்டுமே தப்பியுள்ளனர்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டு தலைநகர் மருத்துவமனை ஒன்றிற்கு கொடையாக வழங்கிய, மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி ஒன்று, நவம்பர் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை, ஆசீர்வதிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கீழைவழிபாட்டுமுறை திருஅவைகள் பேராயத்தின் நிதியுதவியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஈராக்கின் புனித இரபேல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உதவிகுறித்து தன் நன்றியை திருத்தந்தைக்கு வெளியிட்டுள்ளார், இம்மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர், அருள்சகோதரி Maryanne Pierre.

திருத்தந்தையால் கொடையாக வழங்கப்பட்டுள்ள இக்கருவியால் உருவாக்கப்படும் மருத்துவ ஆக்சிஜன், புனித இரபேல் மருத்துவமனைக்கு மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகள் உட்பட, பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

25 November 2021, 14:34