தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

கோவிட்-19 முன்வைத்துள்ள இருவிதத் தெரிவுகள்

அதிகார வர்க்கங்களும், அரசுகளும் ஆயுதங்களை மீண்டும் குவிப்பதற்கு நியாயம் சொல்கின்றன, ஆனால் அந்நடவடிக்கை, பெரிய அளவில் மனிதாபிமான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமையும் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் ஆயுதங்கள் முற்றிலும் களையப்படுவதற்கு, நாடுகள் அனைத்தும் உண்மையாகவே ஒருங்கிணைந்து தங்களை அர்ப்பணித்தால் மட்டுமே, உலகில் அமைதியை உருவாக்கமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி குறித்த கருத்தரங்கு ஒன்றிற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சின் பாரிஸ் மாநகரில், ‘நான்காவது பாரிஸ் அமைதி மாநாடு 2021’ என்ற தலைப்பில், நவம்பர் 11, இவ்வியாழன் முதல், 13, இச்சனிக்கிழமை வரை நடைபெறும் கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் உலகை முன்னேற்றுவதற்கு, பொறுப்புணர்வுடன்கூடிய நம்பிக்கை அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இருவகைத் தெரிவுகள்

கோவிட்-19லிருந்து மீண்டுவரும் உலகை மையப்படுத்தி இச்செய்தியை எழுதியுள்ள திருத்தந்தை, வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்ற மனிதக் குடும்பம், இருவகைத் தெரிவுகளை எதிர்கொள்கிறது என்றும், தன்னிறைவு, தேசியவாதம், தனிமனிதக் கோட்பாட்டியல், பாதுகாப்பியல் போன்ற நம் ஏழைச் சகோதரர், சகோதரிகளை ஒதுக்குகின்ற பழைய சமூக அமைப்புமுறைகளுக்குத் திரும்பலாம் அல்லது, சிறந்ததோர் உலகைக் கட்டியமைக்கப் புதியதொரு பாதையைத் தெரிவுசெய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

துண்டு துண்டாக ஆக்கப்பட்டுள்ள இவ்வுலகில், பெருந்தொற்று பிரச்சனையிலிருந்து நாம் வெளிவர மேற்கொள்ளும் தீர்மானங்கள், வருங்காலத் தலைமுறைகளைத் தீர்மானிக்கும்    என்று கூறியுள்ள திருத்தந்தை, பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைவிட, சிறப்பான ஓர் உலகை உருவாக்க, புதிய வழிகளைக் கண்டுணர, நாம் ஒன்றுசேர்ந்து உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த ஆயுதக்களைவு

அதிகார வர்க்கங்களும், அரசுகளும், ஆயுதங்களை மீண்டும் குவிப்பதற்கு நியாயம் சொல்கின்றன, ஆனால் அந்நடவடிக்கை, பெரிய அளவில் மனிதாபிமான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள திருத்தந்தை, கோவிட் பெருந்தொற்று, நம் பலவீனங்கள், மற்றும், இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது, இருந்தபோதிலும், நமக்கு நம்பிக்கை தேவைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அநீதிகளும், வன்முறையும் தவிர்க்கமுடியாதவை அல்ல எனவும், அவை நம் மதங்களின் இறுதி இலக்கு அல்ல எனவும், திருஅவையின் சமூகக் கோட்பாடும், மற்ற மத மரபுகளும் இவ்வாறே போதிக்கின்றன எனவும் கூறியத் திருத்தந்தை, மனம் மாறுவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, மனிதக்குடும்பத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்குமாறு அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2021, 16:04