தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

சிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கு – திருத்தந்தை செய்தி

சிறுவர், சிறுமியர் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது மட்டும் போதாது, அத்தகையச் சூழல்கள் மீண்டும் உருவாகாதவண்ணம் பாதுகாப்பு அமைப்புக்களை உருவாக்குவதும் மனித சமுதாயத்தின் கடமை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"கோவிட் பெருந்தொற்று காலத்திலும், அதைக் கடந்தும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், நேரடியாகவும், வலைத்தளம் வழியாகவும் பங்கேற்கும் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார். 

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்துடன், திருத்தந்தை 23ம் யோவான் குழுமமும், இத்தாலியின் பொலோஞ்ஞா பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், ஐரோப்பாவின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பது குறித்து, திருத்தந்தை, தன் மகிழ்வை, இச்செய்தியில் வெளியிட்டுள்ளார்.

பெரியவர்களால், பல்வேறு வழிகளில், சிறுவர், சிறுமியர் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது மட்டும் போதாது, அத்தகையச் சூழல்கள் மீண்டும் உருவாகாதவண்ணம் பாதுகாப்பு அமைப்புக்களை உருவாக்குவதும் மனித சமுதாயத்தின் கடமை என்று, 2018ம் ஆண்டு தான் எழுதிய ஒரு மடலில் கூறிய எண்ணத்தை, திருத்தந்தை இச்செய்தியில் மீண்டும் நினைவுறுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகள், திருஅவை மேற்கொண்டுவரும் வேதனை நிறைந்த ஒரு பயணத்தின் வழியே கற்றுக்கொண்ட அனைத்து பாடங்களும், உலகினர் அனைவருக்கும் உதவியாக அமையவேண்டும் என்பதையும், திருத்தந்தை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிறாரின் பாதுகாப்பு என்பது, அமைப்பு முறைகளில், சட்டங்கள் வழியே உறுதி செய்யப்பட்டாலும், ஒவ்வொருவரின் மனமாற்றத்தின் அடிப்படையில், அந்த பாதுகாப்பு நிலைத்திருக்க முடியும் என்றும், குடும்பங்களில் துவங்கி, சமுதாயத்தின் பல்வேறு நிறுவனங்களில், இந்த மனமாற்றம் உருவாகும் வழிமுறைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

திருத்தந்தை 23ம் யோவான் குழுமமும், இத்தாலியின் பொலோஞ்ஞா பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முயற்சியில் இளையோர் அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய இளைய தலைமுறையினரின் உறுதியான நிலைப்பாட்டால் நம் சமுதாயத்தை பீடித்திருக்கும் இந்த நோயை நாம் முற்றிலும் நீக்கமுடியும் என்று நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

பொதுநிலையினரின் கூடுதல் ஈடுபாட்டுடன் நடைபெறும் இந்த முயற்சியில், திருஅவை இன்னும் கூடுதலாகப் பங்கேற்று, பாடங்களைப் பயில, தான் இறைவேண்டல் செய்வதாகக் கூறி, திருத்தந்தை, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2021, 14:49