தேடுதல்

கிளாஸ்கோ நகரில் COP26 மாநாட்டையொட்டி நடைபெற்ற திருவிழிப்பு கிளாஸ்கோ நகரில் COP26 மாநாட்டையொட்டி நடைபெற்ற திருவிழிப்பு 

ஸ்காட்லாந்து மக்களுடன் செபத்தில் இணையும் திருத்தந்தை

நாம் தற்போது சந்தித்துவரும் இக்கட்டானச் சூழல்களில், அகில உலகத் திருஅவை, இன்னும் ஆழமாக ஒன்றித்திருக்கவும், அனைத்து நெருக்கடிகளையும் இணைந்து சந்திக்கவும் இறைவேண்டல் புரிவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவன் நமக்கு வழங்கியுள்ள மாபெரும் கொடையான படைப்பைப் பாதுகாப்பதற்கும், நம் பொதுவான இல்லமான பூமியை பாதுகாப்பதற்கும் ஸ்காட்லாந்து மக்கள் இணைந்து வந்து செபிக்கும் வேளையில் அவர்களோடு தானும் இணைவதாகக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு மடலொன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், தற்போது நடைபெற்றுவரும் காலநிலை மாற்ற உச்சி மாநாடான COP26ல் தான் நேரடியாகப் பங்கேற்று, ஒரு குறுகிய நேரமாகிலும் ஸ்காட்லாந்து மக்களோடு செலவழிக்க தான் எண்ணியிருந்த திட்டம் நிறைவேறாமல் போனதற்கு, இம்மடலின் துவக்கத்தில் தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

COP26 மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் தலைவர்களுக்கு, இறைவன், தன் ஞானம் மற்றும் சக்தி ஆகிய கொடைகளை வழங்கவும், மனித சமுதாயம் சந்தித்துவரும் இந்த பெரும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, இத்தலைவர்கள், தகுந்த முடிவுகள் எடுக்கவும், ஸ்காட்லாந்து மக்களுடன் இணைந்து, தானும் இறைவேண்டல் புரிவதாக, திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலை, நவம்பர் 9ம் தேதி எழுதியதால், அந்த நாளில் சிறப்பிக்கப்பட்ட புனித இலாத்தரன் பெருங்கோவில் அர்ச்சிப்பு திருநாளை நினைவுகூர்ந்து, உரோம் திருஅவையோடு ஆன்மீக முறையில் ஒன்றித்திருக்கும் ஸ்காட்லாந்து தலத்திருஅவைக்கு, தன் நன்றியையும், ஆசீரையும் தெரிவித்தார்.

நாம் தற்போது சந்தித்துவரும் இக்கட்டானச் சூழல்களில், அகில உலகத் திருஅவை, இன்னும் ஆழமாக ஒன்றித்திருக்கவும், அனைத்து நெருக்கடிகளையும் இணைந்து சந்திக்கவும், ஸ்காட்லாந்து மக்கள் இறைவேண்டல் புரியுமாறு விண்ணப்பித்து, திருத்தந்தை, இம்மடலை நிறைவுசெய்துள்ளார்.

மேலும், நவம்பர் 11, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட தூர் நகர் புனித மார்ட்டின் திருநாளையும், கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் COP26 உச்சி மாநாட்டையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

"நம் வாழ்வை வறுமையில் வாழாமல் இருப்பதற்கு, இயேசுவை, வறியோரில் காண்பதற்கும், வறியோர் பணி வழியே, இயேசுவுக்கு பணியாற்றவும் தேவையான அருளை வேண்டுவோம்" என்ற சொற்கள், தூர் நகர் புனித மார்ட்டின் என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

"உடன்பிறந்த நிலை, அன்பு, மற்றும் புரிதல் ஆகிய பண்புகளில் வேரூன்றிய உலகளாவிய ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கு இது ஏற்ற தருணம். இலாபத்தைக் காட்டிலும், மக்களை மதிப்பதற்கும், முன்னேற்றம் என்ற கருத்தை புதிய வழிகளில் புரிந்துகொள்வதற்கும், ஏற்ற தருணம் இது" என்ற சொற்களை, COP26 என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 2வது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2021, 14:15