புலம்பெயர்வோரின் துயர் நிலைகள் தொடர்கின்றன
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
நலமான வாழ்வைத்தேடி, தங்கள் வாழ்வையும் பணயம்வைத்து மேற்கொள்ளும் பயணங்களில், பலவேளைகளில், தங்கள் உயிரை இழக்கும் ஆயிரக்கணக்கான குடிபெயர்வோர் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், குடிபெயர்வோர் குறித்த தன் எண்ணங்களையும், அக்கறையையும், பகிர்ந்துகொண்டார்.
மிகக்கொடிய ஆபத்துக்களுக்குத் தங்களை உட்படுத்தி, பலவேளைகளில் தங்கள் உயிரையும் இழக்கும் புலம்பெயர்வோரின் நிலை குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் கடந்த வாரம் படகு ஒன்று கவிழ்த்ததில் ஏறக்குறைய 30 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தது, பெலாருஸ் எல்லைப்பகுதியில், குழந்தைகள் உட்பட, பல புலம்பெயர்வோரின் நிலை, மத்தியதரைக் கடலில் அவ்வப்போது உயிரிழக்கும் புலம்பெயர்வோர், ஆகியோர்பற்றி குறிப்பிட்டு, கவலையை வெளியிட்டார்.
மத்தியதரைக்கடல் பகுதியை கடக்க முயல்கையில் பிடிக்கப்படும் மக்கள், வட ஆப்ரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உயிர்களை, வியாபாரப் பொருட்களாக நடத்துவோரின் கைகளில் சிக்கும் இந்த புலம்பெயர்வோர், பெண்களாக இருக்கும்பட்சத்தில் விற்கப்படுவதாகவும், ஆண்கள் என்றால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் எடுத்துரைத்து, அவர்கள் அடிமை வாழ்வுக்கு திரும்புவது குறித்த வருத்தத்தை தெரிவித்தார்.
இந்த வாரத்தில் கூட, மத்தியதரைக் கடல் பகுதி வழியாக வாழ்வு தேடி வந்த புலம்பெயர்ந்தோர், கடலுக்குள் மரணத்தை சந்தித்தது பற்றி கவலையை வெளியிட்ட திருத்தந்தை, புலம்பெயரும் மக்களையும், அவர்களின் துயர்களையும் எண்ணிப்பார்த்து, அவர்களுக்காக அமைதியில் செபிப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.