தேடுதல்

கிராமப்புற பெண்கள் கிராமப்புற பெண்கள்  

திருத்தந்தை - கிராமப்புற பெண்கள் கற்றுக்கொடுக்கின்றனர்

2020ம் ஆண்டில், உலக அளவில் ஏறத்தாழ 237 கோடிப் பேர் போதிய உணவின்றி இருந்தனர் - ஐ.நா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிராமப்புற பெண்கள் உலக நாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 15, இவ்வெள்ளியன்று, கிராமப்புற பெண்கள் உலக நாள் (#RuralWomenDay) என்ற ஹாஷ்டாக்குடன், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள இரண்டாவது குறுஞ்செய்தியில், சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணியில், கிராமப்புற பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

“உணவு, பொருள்கள் சமமாக விநியோகிக்கப்படல், மற்றும், ஒவ்வொரு மனிதரின் ஆசைகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, முயற்சிகளும் தியாகங்களும் எவ்வளவு தேவைப்படுகின்றன என்பதை, கிராமப்புற பெண்கள் கற்றுத்தருகின்றனர்” என்ற சொற்கள், திருத்தந்தையின்  டுவிட்டர் செய்தியில் வெளியாயின.  

“கிராமப்புற பெண்கள் நல்ல உணவுகளை உற்பத்திசெய்கின்றனர்” என்ற தலைப்பில், அக்டோபர் 15, இவ்வெள்ளியன்று, ஐ.நா.வின் கிராமப்புற பெண்கள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டது. 

வேளாண்மை, கிராம முன்னேற்றம், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல், கிராமப்புற ஏழ்மையை அகற்றுதல் ஆகியவற்றுக்கு, பழங்குடி இனப் பெண்கள் உட்பட, கிராமப்புறப் பெண்கள் ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2007ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18ம் தேதி, கிராமப்புறப் பெண்கள் உலக நாளை உருவாக்கியது.

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புக்களோடு பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளால், உலகின் பல பகுதிகளில் வருவாயும், சமுதாயப் பாதுகாப்பும் பெருமளவில் குறைந்துள்ளன. இதனால், 2020ம் ஆண்டில், உலக அளவில் ஏறத்தாழ 237 கோடிப் பேர் போதிய உணவின்றி இருந்தனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

உலக அளவில் சொந்த நிலங்களைக் கொண்டிருப்போரின் எண்ணிக்கையில், 20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். கிராமப்புறங்களில் பாலின இடைவெளி, ஏறத்தாழ நாற்பது விழுக்காடாகும்  என்றும் ஐ.நா. கூறியுள்ளது. (UN)

15 October 2021, 15:18