தேடுதல்

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் (23-27.06.2001) திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் (23-27.06.2001) 

அக்டோபர் 22, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் திருநாள்

“பொய்யான முழக்கங்களோ, தவறான கருத்தியல்களோ, வேறெதுவுமே கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரித்துவிடாமல் இருப்பதில் விழிப்புடன் இருங்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 22, இவ்வெள்ளியன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் திருநாளை மையப்படுத்தி, இரண்டாம் யோவான் பவுல் என்ற ஹாஷ்டாக்குடன் (#JohnPaulII) டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“பொய்யான முழக்கங்களோ, தவறான கருத்தியல்களோ, கடவுளைச் சாராதவற்றோடு இணக்கம்கொள்ள வைக்கும் சோதனைகளில் சிக்கிக்கொள்வதோ, எதுவுமே கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரித்துவிடாமல் இருப்பதில் விழிப்புடன் இருங்கள்”. இவ்வாறு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் நம்மிடம் கூறுவதை, அவரது  திருநாளன்று நினைவில் வைப்போம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின் திருவழிபாடுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பர் மாதத்தில் நிறைவேற்றும் திருவழிபாடுகள் குறித்த விவரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, பேரருள்திரு தியெகோ ஜொவான்னி ரவெல்லி (Diego Giovanni Ravelli) அவர்கள், அக்டோபர் 22, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 4ம் தேதி, வியாழன் உள்ளூர் நேரம் பகல் 11 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், கடந்த ஆண்டில் இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும், ஆயர்களின் ஆன்மா நிறையமைதியடைய திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, உரோம் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, 14ம் தேதி ஆண்டின் 33ம் ஞாயிறன்று புனித பேதுரு பெருங்கோவிலில், வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2021, 15:17