தேடுதல்

2021.10.27  Udienza Generale 2021.10.27 Udienza Generale 

திருத்தந்தை: தூய ஆவியாரே, ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்

வறியோருக்கென்று, இதயநோய் சிகிச்சை நகரும் மருத்துவமனை ஒன்று, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அக்டோபர் 25 இத்திங்களன்று செயல்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“இயேசுவின் பாஸ்கா பேருண்மையிலிருந்து பொழியப்படும் தூய ஆவியாரே, ஆன்மீக வாழ்வின் ஆரம்பம் என்றும், நம் பணிகளை அல்ல, மாறாக, நம்மில் தூய ஆவியார் செயல்படுவதற்கேற்ப நம் இதயங்களை அவர் மாற்றுகிறார்!” என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று கூறியுள்ளார்.

புனித பவுலடிகளார் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் கூறியுள்ள தூய ஆவியாரின் கனிகளைப்பற்றி (கலா.5,22-24) அக்டோபர் 27, இப்புதன் மறைக்கல்வியுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைக்கல்வியுரையின் அடிப்படையில், பொது மறைக்கல்வியுரை (#GeneralAudience) என்ற ஹாஷ்டாக்குடன், இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 21ல் உலக இளையோர் நாள் திருப்பலி

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற வாரத்தில் துவங்கும் நவம்பர் மாதம் 21ம் தேதி, பொதுக்காலம் 34ம் ஞாயிறு சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, உரோம் உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் 36வது இளையோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இப்புதனன்று அறிவித்துள்ள, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான, பேரருள்திரு தியெகோ ஜொவான்னி ரவெல்லி (Diego Giovanni Ravelli) அவர்கள், வருகிற நவம்பர் 4, 5, 14 ஆகிய நாள்களில் திருத்தந்தை நிறைவேற்றும் ஏனையத் திருப்பலிகள் குறித்த விவரங்களை, இம்மாதம் 22ம் தேதியன்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 4ம் தேதி பகல் 11 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், கடந்த ஆண்டில் இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும், ஆயர்களின் ஆன்மா நிறையமைதியடைய திருப்பலி, நவம்பர் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு, உரோம் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருப்பலி, மற்றும், நவம்பர் 14ம் தேதி ஆண்டின் 33ம் ஞாயிறன்று புனித பேதுரு பெருங்கோவிலில், வறியோர் உலக நாள் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.

வறியோரைப் பராமரிக்கும் நகரும் மருத்துவமனை

வறியோரைப் பராமரிக்கும் நகரும் மருத்துவமனை
வறியோரைப் பராமரிக்கும் நகரும் மருத்துவமனை

இன்னும், வறியோருக்கென்று, இதயநோய் சிகிச்சை வழங்கும் நகரும் மருத்துவமனை ஒன்றை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தையின் பிறரன்பு அமைப்பு அலுவலகமும், இத்தாலிய இதயநோய் அறக்கட்டளையும், உரோம் San Carlo di Nancy மருத்துவமனை குழுமமும் இணைந்து நடத்தியுள்ளன.

அக்டோபர் 25, இத்திங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்பட்ட இம்மருத்துவமனை, "இதயத்தின் சாலைகள், முன்தடுப்புக்கு ஒரு பயணம்" என்ற தலைப்புடன், இப்புதிய முயற்சியை மேற்கொண்டது. இம்முயற்சி, இதயம் சார்ந்த பிரச்சனைகளைப் பரிசோதிக்க இயலாமல் இருக்கும் ஏழைகளுக்கு வாழ்வு வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

இத்தாலியில் இடம்பெறும் இறப்புக்களில் 35.8 விழுக்காடு, இதயநோய் தொடர்புடையதாகும். இது பெண்களில் 38.8 விழுக்காடும், ஆண்களில் 32.5 விழுக்காடும்  இடம்பெறுகின்றன. சாலைகளில் வாழ்வோர், இதயநோயால், அதிகம் இறக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2021, 14:25