தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவேண்டல் செய்யும்போது நாம் தனியாக இல்லை

இறைவேண்டல் செய்யும்போது நாம் தனியாக அல்ல, மாறாக, புனிதர்கள் குழுமத்தோடு ஒன்றித்து வேண்டுகிறோம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டல் செய்யும்போது நாம் தனியாக அல்ல, மாறாக, புனிதர்கள் குழுமத்தோடு ஒன்றித்து வேண்டுகிறோம் என்ற கருத்தை மையமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 30, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 01, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படும் புனிதர் அனைவரின் பெருவிழாவை முன்னிட்டு, இச்சனிக்கிழமையன்று இறைவேண்டல், புனிதர்களின் ஒன்றிப்பு (#Prayer #CommunionOfSaints) என்ற ஹாஷ்டாக்குகளுடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இறைவேண்டல் செய்யும்போது, ஒருபோதும் நாம் தனியாகச் செய்வதில்லை என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நாம் இறைவேண்டல் செய்வதுபற்றி சிந்திக்காமல் இருந்தாலும்கூட, அந்நேரத்தில், நமக்கு முன்னேயும், நமக்குப் பின்னேயும் எழுகின்ற, மன்றாட்டுக்களின் மிகப்பெரும் ஆற்றில் மூழ்கியிருக்கிறோம் என்றும் திருத்தந்தை, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் சந்திப்புக்கள்

ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, கோஸ்டா ரிக்கா திருப்பீடத் தூதர் பேராயர் Bruno Musarò, உலக சுற்றுலாத் துறையின் (UNWTO) திருப்பீடப் பிரதிநிதி அருள்பணி Maurizio Bravi, பேராயர் Giuseppe Pinto, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் Vincenzo Paglia, காமரூன் மற்றும் ஈக்குவிட்டோரியல் கினி திருப்பீடத் தூதர் பேராயர் Julio Murat, கிறிஸ்தவ வாழ்வின் தோழமை சபையின் தலைவர் அருள்பணி José David Correa Gonzalez ஆகியோரையும் அக்டோபர் 30, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

30 October 2021, 13:13