தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

நற்செய்தியின் அழகை வாழ்வால் வெளிப்படுத்தும் கிறிஸ்தவர்கள்

காலநிலை மாற்றம் நம் உலகத்திற்கு உருவாக்கியுள்ள நெருக்கடியைக் களைவதற்கு, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்ற புதுப்பிக்கப்பட்ட உணர்வோடு அதனை எதிர்கொள்ளலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடு, கிறிஸ்தவர்கள் நற்செய்தியின் அழகை வெளிப்படுத்தும் முறை ஆகிய இரண்டையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 29, இவ்வெள்ளி, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் நம் உலகத்திற்கு உருவாக்கியுள்ள நெருக்கடியைக் களைவதற்கு, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்ற புதுப்பிக்கப்பட்ட உணர்வோடு அதனை எதிர்கொள்ளலாம், இதற்கு, நீதியின் அடிப்படையில் உறுதியான ஒருமைப்பாட்டுணர்வும், இவ்வுலகத்திற்கு கடவுள் வகுத்துள்ள திட்டத்தில் நம் மனிதக் குடும்பத்தின் ஒற்றுமை மற்றும், நம் பொதுவான இலக்கு பற்றிய உணர்வும் தேவை என்பதை ஏற்கவேண்டும் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், “தங்களின் வாழ்வால், நற்செய்தியின் அழகை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை அறிந்திருக்கின்ற, உரையாடலை ஊக்குவிக்கின்ற, உடன்பிறந்த உணர்வு வாழ்வுக்கு எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்கின்ற, உபசரிப்பு மற்றும் தோழமையின் இனிய நறுமணத்தைக் கொணர்கின்ற, வாழ்வைப் பாதுகாக்கின்ற கிறிஸ்தவர்கள் உலகத்திற்குத் தேவைப்படுகின்றனர்” என்ற சொற்கள் வெளியாகிருந்தன.

மேலும், தற்போது உலகில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பரிசீலனை செய்வதற்காக, உலகின் இருபது பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான G20 என்ற அமைப்பின் தலைவர்களில் பலர், உரோம் நகருக்கு வந்துள்ளனர்.

அக்டோபர் 30 இச்சனிக்கிழமை, 31 ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறும் G20 நாடுகள் அமைப்பு நடத்தும் இம்மாநாட்டில், சில தலைவர்கள் நேரடியாகவும், சிலர் இணையம்வழியாகவும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

29 October 2021, 16:14