தேடுதல்

Vatican News
ஏமனில் விவசாயத் தொழில் ஏமனில் விவசாயத் தொழில் 

எல்லாருக்கும் உணவு கிடைப்பதற்கு, ஒருங்கிணைந்த செயல்பாடு

உலகில் வறுமை மற்றும் பசியை அகற்றுவதற்கு, மனத்தாராளத்தோடு அர்ப்பணித்துள்ள அனைவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வெறும் பொருளாதார இலாபத்திலும், உணவை மற்றுமொரு விற்பனைச் சரக்காக மாற்றுவதிலும் மட்டுமே பேராசைகொண்டு செயல்படும் சந்தைகளின் நியாயமற்ற கருத்தியல்கள் களையப்படுவதும், ஒருமைப்பாட்டுணர்வை வலுப்படுத்துவதும், பசியை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 16, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் உலக உணவு நாளை முன்னிட்டு, FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Qu Dongyu அவர்களுக்கு, அக்டோபர் 15, இவ்வெள்ளியன்று அனுப்பிய செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார். 

இவ்வாண்டு உலக உணவு நாளுக்கென தெரிவுசெய்யப்பட்டுள்ள, "நம் செயல்களே, நம் வருங்காலம். சிறந்த உற்பத்தி, சிறந்த சத்துணவு, சிறந்த சுற்றுச்சூழல், சிறந்த வாழ்வு" என்ற தலைப்பு, எல்லாருக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதிசெய்வற்கு, ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இன்றையக் காலக்கட்டத்தில், 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குப் போதுமான சத்துணவு கிடைக்கவில்லை, அதேநேரம், ஏறத்தாழ 200 கோடிப் பேர், உடல்நலத்திற்கு ஒவ்வாத அல்லது, ஆடம்பரமான வாழ்வுமுறையால், உடல் எடையை அளவுக்கு அதிகமாகக் கொண்டிருக்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.   

முழு மனித சமுதாயத்தையும், நம் பூமிக்கோளத்தையும் ஆபத்திலிருந்து காப்பாற்ற நாம் விரும்பினால், உணவு அமைப்புமுறைகளை ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்பு செய்யவேண்டும், மற்றும், எல்லா நிலைகளிலும் மாற்றம் இடம்பெற, அனைவரும் உற்சாகத்தோடு பங்கெடுக்க ஊக்கவிக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். 

உணவு அமைப்புமுறைகளில் மாற்றம் கொணர

நிலங்கள், கடல், உணவு பரிமாறப்படும் இடங்கள், உணவுப்பொருள் இழப்பு மற்றும் வீணாக்கப்படல் ஆகியவையே, இன்றைய உலகில், உணவு அமைப்புமுறைகளில் மாற்றம் கொணர்வதற்கு உடனடியாகத் தேவைப்படும் நான்கு துறைகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற, நாம் வாழும்முறை மற்றும், நம் அன்றாட நுகர்வு நடவடிக்கைகளில் உண்மையான மாற்றம் கொணரவிரும்பினால், உற்பத்தியாளரும், நுகர்வோரும், நன்னெறி சார்ந்த உறுதியான தீர்மானங்கள் எடுக்கவேண்டும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, பசியில்லா உலகை அமைப்பதற்கு, இளைய தலைமுறைகளின் முக்கியக் கடமை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகள், உலகளாவிய உணவு அமைப்புமுறைகளில் மாற்றம் கொணரவும், அதற்கு முதலீடு செய்யவும், நல்லதொரு வாயப்பாக உள்ளன என்று கூறியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் அல்லது புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு, திருப்பீடமும், கத்தோலிக்கத் திருஅவையும், FAO மற்றும், ஏனைய அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுவது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை மற்றும், நல்லிணக்கத்தை விதைக்கும் அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகள், மற்றும் திட்டங்கள் பலன்கள் நல்க, தன் செபங்களையும் ஆதரவையும் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் வறுமை மற்றும் பசியை அகற்றுவதற்கு, மனத்தாராளத்தோடு அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் தன் ஆசீரை வழங்குவதாகத் தெரிவித்து, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

15 October 2021, 15:07