தேடுதல்

சமுதாய இயக்கங்கள் 4வது உலக மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி

வறிய நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் இரத்துச் செய்யப்படல், ஆயுதங்கள் மீது தடைவிதித்தல், தடுப்பூசிகள் மீதுள்ள காப்புரிமைகளைத் தளர்த்துதல் போன்றவற்றுக்காக திருத்தந்தை உலகத் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மிகவும் நீதி நிறைந்த, ஒற்றுமை, மற்றும், உடன்பிறந்த உணர்வைக் கூடுதலாகக் கொண்ட ஓர் உலகை அமைப்பதற்கு உழைக்குமாறு, இந்த பூமிக்கோளத்தின் மிகவும் வல்லமைமிக்க தலைவர்களுக்கு உருக்கமான விண்ணப்பம் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ளார்.

அக்டோபர் 16, இச்சனிக்கிழமை பிற்பகலில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற  திருப்பீட அவை ஏற்பாடு செய்திருந்த, சமுதாய இயக்கங்களின் நான்காவது உலக மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம், இஸ்பானிய மொழியில், காணொளி வழியாகப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் அதிகாரப்பலத்தை அதிகமாகக்கொண்டிருக்கும் தலைவர்களுக்கு, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

உலகத் தலைவர்களுக்கு திருத்தந்தை

வறிய நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் இரத்துச் செய்யப்படல், ஆயுதங்கள் மீது தடைவிதித்தல், பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவரல், அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு வழியமைக்கும் காப்புரிமைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றுக்காக உலகத் தலைவர்கள் தங்களை அர்ப்பணிக்குமாறு, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊதியத்தை வரையறுத்தல், தினசரி வேலைநேரத்தைக் குறைத்தல் ஆகிய இரண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று, உலகத் தலைவர்கள் மற்றும், மதத் தலைவர்களுக்குப் பரிந்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு முக்கிய பரிந்துரைகளோடு, மூன்றாவது முக்கிய பரிந்துரையாக, தடுப்பூசிகள் காப்புரிமைகளைக் கொண்டிருப்போர் அவற்றைத் தளர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகத் தலைவர்களுக்கு,  ஒன்பது விண்ணப்பங்களை, கடவுளின் பெயரால் முன்வைக்க விரும்புவதாகவும், திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

சமுதாயக் கவிஞர்கள்

சமுதாய இயக்கங்கள் நான்காவது உலக மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவரையும் சமுதாயக் கவிஞர்கள் என்று அழைத்து, தன் செய்தியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று புறக்கணிக்கப்படும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கத் திறனையும் துணிச்சலையும் கொண்டிருப்பதால் நீங்கள், சமுதாயக் கவிஞர்கள் என்று அவர்களிடம் கூறினார்.

கவிதை என்பது படைப்பாற்றலாகும் என்றும், நீங்கள் நம்பிக்கையை உருவாக்குகிறீர்கள் என்றும் கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும், குடும்பங்களும், சமுதாயமும், நிலம், வீடு, வேலை, பராமரிப்பு, குழுமம் ஆகியவற்றைக்கொண்டு மாண்போடு வாழ்வதை உங்கள் கரங்களால் உருவாக்கத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று, சமுதாய இயக்கங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சமுதாய இயக்கங்கள்
சமுதாய இயக்கங்கள்

உணவு நெருக்கடியால் 2 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கோவிட்-19 பெருந்தொற்றால், இவ்வெண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, திருஅவையின் சமுதாயக் கோட்பாடு அழைக்கும் "பாவத்தின் அமைப்புமுறைகளில்" மாற்றம் கொணருமாறு தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தனிநபரில் மாற்றம் இடம்பெற்றால் மட்டும் போதாது, மாறாக, சமுதாய-பொருளாதார அமைப்புமுறைகளில் மாற்றம் தேவை என்றும், இந்த அமைப்புமுறைகள் பலவற்றால், மனிதர் தங்கள் முகங்களை இழக்கின்றனர் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

கடவுளின் பெயரால் 9 விண்ணப்பங்கள்

தடுப்பூசிகள் காப்புரிமை தளர்த்தப்பட்டு, மனித சமுதாயம் முழுவதும், அதனைப் பெற வழிசெய்யப்படவேண்டும், ஏனெனில் மூன்று அல்லது நான்கு விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்ற நாடுகள் உள்ளன.

நாடுகள் தங்கள் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும்வண்ணம் அவற்றின் வெளிநாட்டு கடன்கள் மன்னிக்கப்படவேண்டும், ஏனெனில் நாடுகள் கடன்களுக்குச் செலுத்தும் வட்டியால் குடிமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பெரிய கனிமச் சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள், நிலவிற்பனையாளர்கள், வேளாண் நிறுவனங்கள் போன்றவை, காடுகள், சதுப்புநிலங்கள், மலைகள் ஆகியவற்றை அழிப்பதையும், ஆறுகள் மற்றும் கடல்களை மாசுபடுத்துவதையும் நிறுத்தவேண்டும்.

பெரிய உணவு நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு மற்றும், விநியோகமுறைகளை மாற்றவேண்டும்.

இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும், புலம்பெயர்வுகளுக்குக் காரணமாகும் வன்முறை மற்றும் போர்களைத் தூண்டிவிடும், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும், வர்த்தகர்கள் முழுவதுமாக தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள், போலிச்செய்திகள், அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்படல் போன்றவை அதிகரிக்க தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டுகொள்ளாமல், மனிதப் பலவீனத்தைச் சுரண்டி இலாபம் தேடும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்

இணையதளம் வழியாக, ஆசிரியர்களோடு உரையாடும் முறைகளை எளிதாக்க சமூகத்தொடர்புசாதனங்கள் உதவவேண்டும்

மக்களின் பெயரை இழிவுபடுத்துகின்ற, அவர்களின் மனதைக் மிகவும் காயப்படுத்துகின்ற, தவறான செய்திகள் வழங்க உதவுவதை ஊடகத்துறையினர் நிறுத்தவேண்டும்

பகைமை உணர்வுகளைத் தூண்டும் செயல்கள், பொருளாதாரத் தடைகள் போன்றவற்றை வல்லமைமிக்க நாடுகள் நிறுத்தவேண்டும்.

இவ்வாறு கடவுளின் பெயரால், உலகத் தலைவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்களை விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சமுதாய இயக்கங்களுக்கு வழங்கியுள்ள இச்செய்தி, பல்வேறு அமைப்புமுறைகளால் புறக்கணிக்கப்படும் மக்களின் வளர்ச்சிக்குப் பணியாற்ற கத்தோலிக்கத் திருஅவை தன்னை அர்ப்பணித்திருப்பதை ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2021, 15:21