தேடுதல்

ஏழைகளுக்காக வழங்கப்படவுள்ள பொருட்களுடன் திருத்தந்தை ஏழைகளுக்காக வழங்கப்படவுள்ள பொருட்களுடன் திருத்தந்தை 

நவம்பர் 12ம் தேதி அசிசி நகரில் வறியோருடன் திருத்தந்தை

ஏழைகளின் அழுகுரல்களுக்கு செவிமடுக்கவேண்டும் என்ற அழைப்புடன் உருவாக்கப்பட்ட உலக வறியோர் நாள், இவ்வாண்டு நவம்பர் 14ல் சிறப்பிக்கப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் திருவழிபாட்டு ஆண்டின் 33ம் ஞாயிற்றுக்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளுக்குத் தயாரிப்பாக, நவம்பர் மாதம் 12ம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில் வறியோர் குழு ஒன்றைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள்' (மாற்.14:7) என்ற இயேசுவின் வார்த்தைகளை மையக்கருத்தாகக்கொண்டு, இவ்வாண்டு, நவம்பர் 14ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் உலக வறியோர் நாளுக்கு தயாரிப்பாக, நவம்பர் 12ம் தேதி அசிசி நகர் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பா முழுவதிலுமிருந்து அங்கு வரும் ஏறக்குறைய 500 வறியோரைச் சந்தித்து அவர்களின் குரல்களுக்கு செவிமடுப்பதுடன், அவர்களோடு இணைந்து செப வழிபாடுகளிலும் கலந்துகொள்வார்.

2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வரை திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில்,  ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும்வண்ணம், உலக வறியோர் நாளை உருவாக்குவதாக அறிவித்திருந்தார்,.

ஏழைகளின் அழுகுரல்களுக்கு செவிமடுக்கவேண்டும் என்ற அழைப்புடனும், மற்றும், ஏழைகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டவும் உருவாக்கப்பட்ட இந்நாள், முதலில் 2017ம் ஆண்டில் 'வாத்தையால் அல்ல, செயல்பாடுகளால் அன்பு கூர்வோம்' என்ற தலைப்புடனும், 2018ம் ஆண்டு, 'ஏழையின் அழுகுரலுக்கு இறைவன் செவிமடுத்தார்' என்ற தலைப்புடனும், 2019ல் 'ஏழைகளின் நம்பிக்கை ஒரு நாளும் அழியாது' என்ற தலைப்பிலும், 2020ல் 'ஏழைகளை நோக்கி உங்கள் கரங்களை நீட்டுங்கள்' என்ற தலைப்பிலும் சிறப்பிக்கப்பட்டது.

ஐந்தாவது உலக வறியோர் நாளுக்கு தயாரிப்பாக, நவம்பர் மாதம் 12ம் தேதி வறியோர் குழுவை அசிசியில் சந்திக்கச் செல்லும் திருத்தந்தையின் இப்பயணம், புனித பிரான்சிஸ் பிறந்த அந்நகருக்கு அவர் மேற்கொள்ளும் ஐந்தாவது திருபயணமாகும். ஏற்கனவே, தான்  திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2013ம் ஆண்டிலும், 2016ம் ஆண்டு இருமுறையும், கடந்த ஆண்டும், அதாவது 2020லும், இந்நகரில் பயணங்களை மேற்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2021, 15:03