தேடுதல்

தொன் போஸ்கோவின் சலேசிய அருள்சகோதரிகள் தொன் போஸ்கோவின் சலேசிய அருள்சகோதரிகள்  

சலேசிய அருள்சகோதரிகள் சபையின் புதிய தலைவருக்கு வாழ்த்து

அன்னை மரியா கானா திருமணத்தில் செயலாற்றியதுபோல, காலத்தின் தேவைகளை உணர்ந்து, நம்பிக்கையின் பெண்களாக, சலேசியத் தனித்துவத்தை வாழ்ந்து காட்டுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நீண்டகால காத்திருப்பு மற்றும், தயாரிப்பு ஆகிவற்றுக்குப்பின் 24வது பொதுப் பேரவையை நடத்திமுடித்துள்ள கிறிஸ்தவர்களின் சகாய அன்னை புதல்வியர் (Figlie di Maria Ausiliatrice FMA)  சபையினரை வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தொன் போஸ்கோவின் சலேசிய அருள்சகோதரிகள் எனப்படும் இத்துறவு சபையினர் உரோம் நகரில் நடத்திய பொதுப்பேரவையில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, அக்டோபர் 22 இவ்வெள்ளியன்று அச்சபையினரின் இல்லத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அச்சபையின் புதிய தலைவர் அன்னை Chiara Cazzuola மற்றும், புதிய ஆலோசர்களுக்கு தன் நல்வாழ்த்தைத் தெரிவித்தார்.

“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவா.2,5) என்று கானாவில் நடைபெற்ற திருமண விருந்தில், அன்னை மரியா இயேசுவிடம் கூறிய சொற்களின் அடிப்படையில், இக்காலத்திற்கேற்ற புதுப்பிக்கப்பட்ட குழுவாழ்வு என்பது குறித்து இப்பேரவையினர் சிந்தித்தது குறித்தும் திருத்தந்தை கூறினார்.

சலேசிய அருள்சகோதரிகள் சபை துவக்கப்பட்டதன் 150ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்குத் தயாரித்துவரும் இச்சகோதரிகள், அழைத்தல் மற்றும், மறைபரப்புப் பணியாளர் ஆகியவை பற்றிச் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வாழ்விலும், வழங்கும் செய்தியிலும் கடவுளின் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பதற்கு, தாழ்ச்சி அவசியம் என்பதை மறக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

சலேசிய அருள்சகோதரிகளின் 24வது பொதுப் பேரவை
சலேசிய அருள்சகோதரிகளின் 24வது பொதுப் பேரவை

அன்னை மரியா கானா திருமணத்தில் செயலாற்றியதுபோல, காலத்தின் தேவைகளை உணர்ந்து, பரிவன்பு மற்றும் கனிவை வெளிப்படுத்தி, நம்பிக்கையின் பெண்களாக, சலேசியத் தனித்துவத்தை வாழ்ந்து காட்டுமாறும் திருத்தந்தை கூறினார்.

சலேசிய அருள்சகோதரிகள் சபை, 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, புனிதர்கள் ஜான் போஸ்கோ, மரியா டொமெனிகா மசாரெல்லோ ஆகியோரால் துவக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2021, 15:23