தேடுதல்

COP26, பலனுள்ள பதில்களை வழங்கும் என்று நம்புவோம்

பிரச்சனைகள் ஒவ்வொன்றும், நம் பொதுவான இல்லம், மற்றும், வருங்கால உலகு பற்றிய மீள்சிந்தனைக்கும், நம் பொதுவான நோக்கம் பற்றி மறுமதிப்பீடு செய்வதற்கும் அழைப்பு விடுக்கின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகினர் அனைவரும் கடமையுணர்வுடன் பொறுப்புக்களைப் பகிர்தல், மற்றும், நீதியை அடிப்படையாகக்கொண்ட ஒருமைப்பாடு ஆகியவை வழியாக, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 29, இவ்வெள்ளியன்று பிபிசி ஊடகத்திற்கு வழங்கிய ஒலி-ஒளி வலைக்காட்சி செய்தியில் கூறியுள்ளார்.

COP26 உலக உச்சி மாநாட்டை முன்னிட்டு, பிபிசி வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும் அனுப்பியுள்ள ஒலி-ஒளி வலைக்காட்சி செய்தியில், காலநிலை மாற்றம் மற்றும், கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவை உருவாக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 31, வருகிற ஞாயிறன்று, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. ஏற்பாடு செய்துள்ள, COP26 எனப்படும், காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவிருப்பதையொட்டி, பிபிசியின் “இன்றையச் சிந்தனை” என்ற நிகழ்ச்சிக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, அனைத்துவிதமான எல்லைகள், தடுப்புகள், அரசியல் சுவர்கள் ஆகியவற்றைப் பின்னுக்குத்தள்ளி, இவ்வுலகை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதற்கு, இம்மாநாடு, நல்லதொரு வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம், கோவிட்-19 பெருந்தொற்று ஆகிய இரண்டும், நம் பலவீனங்களை அதிகமாகவே வெளிப்படுத்தியுள்ளன என்றும், நம் பொருளாதார அமைப்புகள் மற்றும், நம் சமுதாயங்களை நாம் அமைக்கும் முறை குறித்து எண்ணற்ற சந்தேகங்களையும், கவலைகளையும் எழுப்பியுள்ளன என்றும், திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், பிரச்சனைகள் ஒவ்வொன்றும், புதியதொரு கண்ணோட்டத்திற்கும், திட்டங்களை அமைத்து, அவற்றை விரைவில் செயல்படுத்துவதற்கும், நம் பொதுவான இல்லம், மற்றும், வருங்கால உலகு பற்றிய மீள்சிந்தனைக்கும், நம் பொதுவான நோக்கம் பற்றி மறுமதிப்பீடு செய்வதற்கும் அழைப்பு விடுக்கின்றன என்றும் உரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு சமூக, மனிதாபிமான மற்றும், அறநெறிப் பிரச்சனைகள், சமுதாயத்தில் பெரும் எதிர்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்று கூறிய திருத்தந்தை, நம் பாதுகாப்பு உணர்வை நாம் இழந்துள்ளோம் என்றும், சக்தியற்றநிலை, மற்றும்,  நம் வாழ்வுமீது கட்டுப்பாட்டை இழந்துள்ள  உணர்வை நாம் அனுபவித்து வருகின்றோம் எனவும் கூறியுள்ளார்.

நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் மிக ஆழமாக ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன எனவும், இவை, கடவுளின் படைப்பாகிய மாபெரும் கொடையாகிய இப்பூமியில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆன்மீக அளவில் மட்டுமல்ல, பன்முக மனமாற்றத்திற்கும் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை, இந்த உலகுக்கு கடவுள் வகுத்துள்ள திட்டத்தின்படி, நம் பொதுவான நோக்கம், மற்றும் மனிதக் குடும்பத்தின் ஒற்றுமை என்ற உணர்வில், நீதியின் அடிப்படையில் உலகைக் கட்டியெழுப்புவதற்கு நமக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பு நிகழ்வுகள் இறுதிநிலையை எட்டியுள்ள இவ்வேளையில், தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு சாரமுள்ள தீர்வுகாண்பதன் வழியாக, வருங்காலத் தலைமுறைகளுக்கு உறுதியான நம்பிக்கை அளிக்குமாறு, அரசியல் தலைவர்கள், மற்றும், சட்ட அமைப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

அக்டோபர் 31, இஞ்ஞாயிறன்று கிளாஸ்கோவில் துவங்கும் COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடு, வருகிற நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும். இதில் ஏறத்தாழ 200 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2021, 15:52