தேடுதல்

லிபியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள, புகலிடம் தேடுவோர் லிபியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள, புகலிடம் தேடுவோர்  

புலம்பெயர்வோரின் வாழ்வும் மாண்பும் காக்கப்பட…

லிபியா நாட்டின் முகாம்களில், புலம்பெயரும் மக்கள், மனிதாபிமானமற்ற வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக திருத்தந்தை கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பாவிற்கு குடிபெயர்வதற்கான முயற்சியில் லிபியாவில் முடக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடிபெயர்வோர், மற்றும் புலம்பெயர்வோரின் வாழ்வும் மாண்பும் காக்கப்பட, அனைத்துலக சமுதாயம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார்.

அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, நண்பகல் மூவேளை செபவுரை வழங்கியபின் இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிபியாவின் பாதுகாப்பை எதிர்பார்த்து நிற்கும் இந்த குடிபெயரும், மற்றும் புலம்பெயரும் மக்களை தான் மறந்துவிடவில்லை எனவும், அவர்களுக்காக செபித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட இம்மக்கள் அனைவரும் மனிதாபிமானமற்ற வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கவலையை வெளியிட்ட திருத்தந்தை, லிபியாவிலும் மத்தியதரைக்கடல்பகுதியிலும் இடம்பெற்றுவரும் புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தவும், இவர்களைக் காப்பதில் அனைத்துலக சமுதாயம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் காப்பாற்றப்படவும் விண்ணப்பிப்பதாகக் கூறினார்.

ஐரோப்பாவில் நல்வாழ்வைத்தேடி பயணம் செய்யும் வழியில் பிடிக்கப்பட்டு லிபியா முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்தும் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழியிலேயே தடுக்கப்படும் புலம்பெயர்ந்தோர், அவர்களின் வாழ்வுக்கு ஆபத்தை வழங்கும் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடாது என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

புலம்பெயர விரும்பும் மக்களை, தடுப்புக் காவலில் வைப்பதை தவிர்க்கும் வேறு வழிமுறைகள் காணப்படுவதுடன், குடிபெயர்வோருக்கு சட்டபூர்வ வழிமுறைகளும் உருவாக்கப்பட்டு, இம்மக்களின் மனித மாண்பு காக்கப்பட வழிவகைச் செய்யப்பட வேண்டும் எனவும், தன் மூவேளை செப உரையின் இறுதியில் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா.வின் UNHCR அமைப்பின் கூற்றுப்படி, கடந்த சனிக்கிழமையன்று, 198 புலம்பெயர்ந்தோர் கடலில் மீட்கப்பட்டு, லிபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2021, 14:43