தேடுதல்

பிரான்ஸ் நாட்டு பிரதமருடனும், அவருடன் வந்த குழுவுடனும் திருத்தந்தை பிரான்ஸ் நாட்டு பிரதமருடனும், அவருடன் வந்த குழுவுடனும் திருத்தந்தை  

திருத்தந்தையுடன் பிரான்ஸ் பிரதமர் சந்திப்பு

தினமும் செபமாலை செபிப்பதில் நாம் நிலைத்திருப்பதன் வழியாக, கடவுள் நமக்காகக் கொண்டிருக்கும் மீட்பின் திட்டத்தை அறிந்து கொள்ளமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டு பிரதமர் Jean Castex அவர்கள், இத்திங்கள்கிழமை காலை திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து கலந்துரையாடினார்.

இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது, வத்திக்கானுக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், பிரான்ஸ் தலத்திருஅவையின் பணிகள் குறித்தும், உலக அமைதி மற்றும் இன்றையச் சூழல்கள் குறித்தும் உரையாடல் இடம்பெற்றது.

மேலும், இதே நாளில் தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, லெசோத்தோ, நமீபியா மற்றும் சுவாட்டினி (eSwatini) ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத் தூதர் பேராயர், Peter Bryan Wells  அவர்களும், ஜெர்மன் நாட்டிற்கான திருப்பீடத் தூதர், பேராயர் Nikola Eterović அவர்களும், ஜெர்மன் நாட்டு ஆயர்  Heiner Wilmer அவர்களும், உயிரியல் மருத்துவ பல்கலைக்கழக அமைப்பின்  அங்கத்தினர்களும் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

செபமாலை பக்திமுயற்சியை மையப்படுத்திய அக்டோபர் மாதத்தில், இந்த பக்திமுயற்சியைக் குறிக்த விண்ணப்பங்களுடன், இத்திங்களன்று, இரு டுவிட்டர் செய்திகளையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் Aid to the Church in Need என்ற அமைப்பின் முயற்சியால், பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உலகம் முழுவதும் ஒன்றிணைந்து, ஒன்றிப்பு மற்றும் அமைதிக்காக செபமாலை செபித்துவருவதை சுட்டிக்காட்டி, நம் வானக அன்னை மீது இந்த சிறார் கொண்டுள்ள அதே நம்பிக்கையுடன் நாமும் செபமாலையை செபிப்போம், என தன் முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், தன் இரண்டாவது டுவிட்டரில், தினமும் செபமாலை செபிப்பதில் நாம் நிலைத்திருப்பதன் வழியாக, நாம் அன்னை மரியாவை தினமும் சந்தித்து, கடவுள் நமக்காகக் கொண்டிருக்கும் மீட்பின் திட்டத்தை அறிந்துகொள்ளமுடியும், என எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2021, 14:55