தேடுதல்

இத்தாலிய கத்தோலிக்கர்களின் 49வது சமுதாய வாரம் இத்தாலிய கத்தோலிக்கர்களின் 49வது சமுதாய வாரம்  

திருத்தந்தை: புளிப்பு மாவாக ஒவ்வொருவரும் விளங்கவேண்டும்

இத்தாலிய ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இத்தாலிய கத்தோலிக்கர்களின் 49வது சமுதாய வாரத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்தித்து, திட்டங்கள் வகுக்கவும், கனவு காணவும், இறைவேண்டல் புரியவும் தேவை உள்ளது என்றும், இந்தத் தேவையை, தற்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் கோவிட் பெருந்தொற்று, இன்னும் ஆழமாக நமக்கு உணர்த்தியுள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 21 இவ்வியாழனன்று அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

அக்டோபர் 21 வியாழன் முதல் 24 ஞாயிறு முடிய, இத்தாலியின் தராந்தோ (Taranto) நகரில், இத்தாலிய ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இத்தாலிய கத்தோலிக்கர்களின் 49வது சமுதாய வாரத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நம்மிடையே உருவாக்கியுள்ள அச்சங்களாலும், தடைகளாலும், விரக்தியடைந்து, வீட்டில் நம்மையே அடைத்துக்கொண்டு, சன்னலோரம் நின்று, சமுதாயத்தில் நிகழ்வதை காணும் பார்வையாளர்களாக நாம் மாறிவிடக்கூடாது என்பதை நினைவுறுத்தும் வண்ணம், இந்த கூட்டம் நேருக்கு நேர் நடப்பது, மனதுக்கு நிறைவளிக்கிறது என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாவு முழுவதிலும் புளிப்பேற்ற உதவும் புளிப்பு மாவாக இருக்க (காண்க. மத். 13:33) கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ள திருத்தந்தை, திருஅவை முழுவதும் தற்போது துவங்கியுள்ள ஆயர்கள் மாமன்ற தயாரிப்புகளில், புளிப்பு மாவாக ஒவ்வொருவரும் விளங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

"நாம் நம்பியிருக்கும் பூமிக்கோளம். சுற்றுச்சூழல், வேலை, எதிர்காலம், அனைத்தும் தொடர்புடையன" என்ற தலைப்பு, 49வது சமுதாய வாரத்தின் மையக்கருத்தாக தெரிவு செய்யப்பட்டிருப்பதற்கு தன் பாராட்டை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் மீதும் நீதியின் மீதும் நாம் கொள்ளவேண்டிய தாகத்தை இந்த தலைப்பு நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார்.

அனைத்து நகரங்களின் சாலைகளிலும் காணப்படும் மூன்று அடையாளங்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில், தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

முதல் அடையாளமான பாதசாரிகளின் சந்திப்பைக் குறித்து பேசும் திருத்தந்தை, வாழ்வில் நமக்கு எதிராக வரும் அனைவரையும் நாம் சந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இவர்களில் குறிப்பாக, பல்வேறு சமுதாய பிரச்சனைகளால் நம் வாழ்வில் குறுக்கிடுவோரை சந்திக்காமல் விலகிச் செல்லக்கூடாது என்றும், திருத்தந்தை, தன் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாகனங்களை நிறுத்துமிடம் என்ற இரண்டாவது சாலை அடையாளத்தைப்பற்றி பேசும் திருத்தந்தை, நம் தனிப்பட்ட வாழ்விலும், திருஅவையின் பல நிறுவனங்களின் வாழ்விலும், ஓரிடத்தில் நின்று சுகம் காணாமல், தொடர்ந்து பயணிக்க நம்மை இறைவன் அழைக்கிறார் என்பதை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் திருப்பங்கள் என்ற மூன்றாவது அடையாளத்தைப்பற்றி தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் அழுகுரலுக்கும், குறிப்பாக, வறியோரின் அழுகுரலுக்கும் செவிமடுத்து, நம் வாழ்வில் திருப்பங்களை சந்திக்க நாம் தயங்கக்கூடாது என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் 21 இவ்வியாழனன்று துவங்கியுள்ள 49வது சமுதாய வாரத்திற்கு தன் வாழ்த்துக்களையும் ஆசீரையும் வழங்கிய திருத்தந்தை, அனைவரும் தனக்காக செபிக்க மறக்கவேண்டாம் என்ற விண்ணப்பத்துடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2021, 15:14