தேடுதல்

செல்லிடப்பேசியில், 'Click To Pray' செயலி செல்லிடப்பேசியில், 'Click To Pray' செயலி 

உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்புக்காக 'Click To Pray' 2.0

திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் திருத்தூது பணிக்குழு, 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப்பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், அதற்கு உதவியாக, 'Click To Pray' செயலியின் புதிய வடிவத்தை வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் கருத்துக்களுக்காக, அவரோடு இணைந்து, இறைவேண்டல் புரிவதற்கென உருவாக்கப்பட்டுள்ள 'Click To Pray' என்ற செயலியின் 'Click To Pray' 2.0 என்ற புதிய வடிவம், அக்டோபர் 19, இச்செவ்வாய் பிற்பகலில் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் திருத்தந்தையின் இறைவேண்டல் கருத்துக்களை வெளியிட்டுவரும் திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் திருத்தூது பணிக்குழு, 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப்பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், அதற்கு உதவியாக, 'Click To Pray' செயலியின் புதிய வடிவத்தை வெளியிட்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகம், மற்றும் இருபால் துறவு சபைகளின் உலகத்தலைவர்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, இயேசு சபையினரால் நடத்தப்பட்டு வரும் திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் திருத்தூது பணிக்குழு, இந்த புதிய வடிவத்தை வெளியிட்ட நிகழ்வு, வத்திக்கான் செய்தித்துறையால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலர் கர்தினால் Mario Grech அவர்கள், 'இணைந்து நடத்தல்' என்ற கருத்துடன் தற்போது துவங்கியுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகளுக்கு, 'Click To Pray' செயலியின் புதிய வடிவம் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

திருஅவை ஆற்றும் அனைத்துப் பணிகளின் இதயமாக அமைவது இறைவேண்டல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் திருத்தூது பணிக்குழுவின் தலைவர், இயேசு சபை அருள்பணி Frederic Fornos அவர்கள் இந்த வெளியீட்டு நிகழ்வில் நினைவுறுத்தினார்.

"Click To Pray" 2.0 செயலியின் புதிய வடிவத்தை பதிவிறக்கம் செய்வோரின் செல்லிடப்பேசியில், உலகின் பல நாடுகளிலிருந்தும் விடுக்கப்படும் இறைவேண்டல் விண்ணப்பங்கள் வந்துசேரும் என்றும், அவற்றை மையப்படுத்தி, ஒவ்வொருவரும், இறைவேண்டலை மேற்கொள்ளமுடியும் என்றும், அருள்பணி Fornos அவர்கள், விளக்கிக் கூறினார்.

2019ம் ஆண்டு அக்டோபர் 20, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் துவக்கிவைத்த 'Click To Pray' செயலி, தற்போது 7 மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதும், இதனை 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2021, 13:08