தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை (2021.10.18) புதன் மறைக்கல்வியுரை (2021.10.18) 

G20 நாடுகளின் பெண்கள் அமைப்பினருக்கு திருத்தந்தையின் செய்தி

சிறுமிகளும், பெண்களும் தரமான கல்வி பெறுவதற்கு, அனைத்து அரசுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்து, உலக அரங்குகளில், சிறப்பாக வலியுறுத்தவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில், அனைத்து அமைப்பு முறைகளிலும், பெண்களின் பங்கேற்பு, மற்றும் தலைமைத்துவம் மிக அதிகமாகத் தேவைப்படும் இன்றையக் காலக்கட்டத்தில், G20 நாடுகளின் பெண்கள் அமைப்பு இத்தாலியில் கூடிவந்துள்ளது கண்டு திருத்தந்தை மகிழ்கிறார் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக வழங்கிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

அக்டோபர் 17 இஞ்ஞாயிறு முதல், 19, இச்செவ்வாய் முடிய, இத்தாலியின் மிலான் நகரில், G20 நாடுகளின் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டுள்ள ஒரு சந்திப்பிற்கு, திருத்தந்தையின் சார்பில், கர்தினால் பரோலின் அவர்கள், காணொளி செய்தியொன்றை வழங்கினார்.

சமுதாயத்தின் பல தளங்களில், பாதிப்புக்களையும், சவால்களையும் உருவாக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று, பலரது உள்ளங்களில் விரக்தியை உருவாக்கியுள்ள சூழலில், பெண்களின் நம்பிக்கை தரும் செயல்பாடுகள், இவ்வுலகிற்கு அதிகம் தேவை என்று, கர்தினால் பரோலின் அவர்கள் இச்செய்தியில் கூறினார்.

இவ்வுலகம் சந்திக்கும் சிக்கல்கள் நிறைந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண, பெண்கள், இன்னும் கூடுதலாக செயலாற்றும்வண்ணம், வழிகள் உருவாக்கப்படவேண்டும் என்றும், இதுவே, இன்றைய கலாச்சாரத்தை இன்னும் மனிதாபிமானம் மிக்க கலாச்சாரமாக உருவாக்கும் என்றும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1995ம் ஆண்டு கூறிய சொற்களை, கர்தினால் பரோலின் அவர்கள், இச்செய்தியில் நினைவுகூர்ந்தார்.

வாழ்வு என்ற ஆடையை நெய்வதற்கு, பெண்கள் பொறுமையுடன் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டின் துவக்கத்தில் வழங்கிய ஒரு செய்தியில் கூறியதையும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய உலகம் சந்திக்கும் பொருளாதார, சமுதாய, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளில், தன்னலம் மறந்து உழைக்கும் பண்பு கொண்ட பெண்களின் தலைமைத்துவம் அதிகம் தேவை என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கிய செய்தி எடுத்துரைத்தது.

பெண்களும், ஆண்களும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுறவு முயற்சிகள் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவை என்றும், பெண்கள் முன்னிலை வகிப்பதற்கு ஏற்றவண்ணம், சமுதாயச் சிந்தனைகள், அடைப்படை மாற்றங்களை அடையவேண்டும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.

ஒவ்வொரு நாட்டிலும், சிறுமிகளும், பெண்களும் தரமான கல்வி பெறுவதற்கு, அனைத்து அரசுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை, G20 நாடுகளின் பெண்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள், உலக அரங்குகளில், சிறப்பாக வலியுறுத்தவேண்டும் என்று, திருத்தந்தை, இவ்வமைப்பினரிடம் விண்ணப்பிக்கிறார் என்று கூறி, கர்தினால்  பரோலின் அவர்கள், தன் செய்தியை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2021, 14:44