தேடுதல்

பொதுநிலையினர் கழகங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு திருத்தந்தையின் உரை பொதுநிலையினர் கழகங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு திருத்தந்தையின் உரை 

பொதுநிலையினரின் பணிகளுக்காக திருத்தந்தையின் நன்றி

சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளோரைத் தேடிச்சென்று அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொதுநிலையினரின் அமைப்புக்களை சிறப்பாக எண்ணி பெருமைப்படும் திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கல்வி, நலவாழ்வுத்துறை, சமுதாய ஈடுபாடு என்ற ஒவ்வொருநாள் அம்சங்களிலும் நற்செய்திக்கு சான்றுபகரும் வண்ணம் வாழ்ந்துவரும் பொதுநிலையினருக்கு என் உளம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 16, இவ்வியாழனன்று, ஒரு கருத்தரங்கின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

பொதுநிலையினரின் கழகங்கள் மற்றும் புதிய குழுமங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவோரின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருக்கும் பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலையில் 6ம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்த வேளையில், திருத்தந்தை, அவர்களுக்கு நன்றியைக் கூறி, தன் உரையைத் துவக்கினார்.

"பொதுநிலையினரின் குழுக்களை நிர்வகிக்கும் பொறுப்பு: திருஅவையின் ஒரு பணி" என்ற மையக்கருத்துடன், பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தோர், இத்திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கெவின் பாரேல் (Kevin Farrell) அவர்கள் தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

நற்செய்தியின் மதிப்பீடுகளை பறைசாற்றியதற்காக...

உலகளாவியப் பெருந்தொற்று பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் உருவாக்கியிருந்தாலும், அவற்றைத் தாண்டி, பொதுநிலையினர், நற்செய்தியின் மதிப்பீடுகளை இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் இவ்வுலகிற்குப் பறைசாற்றியதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நன்றியைத் தெரிவித்தார்.

வாழ்வின் பல்வேறு நிலைகளில் வாழ்வோரை, குறிப்பாக, விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளோரைத் தேடிச்சென்று அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொதுநிலையினரின் அமைப்புக்களை தான் சிறப்பாக இவ்வேளையில் எண்ணி பெருமைப்படுவதாக திருத்தந்தை எடுத்துரைத்தார்.

எதிர்காலமும், இன்றைய எதார்த்தங்களும்

பொதுநிலையினரின் அமைப்புகள் அனைத்தும், அந்தந்த தலத்திருஅவையின் பொறுப்பாளர்களுடன் இணைந்து உழைக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணிகள், எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இன்றைய எதார்த்தங்களை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பது நல்லது என்பதை குறிப்பிட்டார்.

பொதுநிலையினரின் பன்னாட்டுக் கழகங்கள், இவ்வாண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இன்றைய நிலையை சீர்தூக்கி, எதிர்காலத்தை வடிவமைக்கும் வழிகளை உணர்த்தியிருப்பதைக் கண்டு தான் மகிழ்வதாக திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

பணி பெறுவதற்கல்ல, பணிபுரிவதற்கே...

உயர்மட்டக் குழுக்களில் பணியாற்றுவோர், பணி பெறுவதற்கல்ல, பணிபுரிவதற்கே அழைக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணியாற்றுவதற்கு எதிராக இருக்கும், அதிகார ஆசை, மற்றும் பிரமாணிக்கம் தவறுதல் என்ற இரு தடைகளைப் பற்றி விளக்கிக் கூறினார்.

நாம் அனைவரும், வாழும் திருஅவையின் உறுப்பினர்கள் என்பதை, தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, திருஅவையின் பல்வேறு நிலைகளில் தூய ஆவியாரின் செயல்பாடுகளைக் காண்பதற்கு நம் அனைவருக்கும் தேவையான திறந்த உள்ளத்திற்காக இறைவனிடம் வேண்டுவோம் என்ற விண்ணப்பத்துடன் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2021, 14:29