தேடுதல்

பிராத்திஸ்லாவா அரசுத்தலைவர் மாளிகையில் தங்க புத்தகத்தில் எழுதுகின்றார், திருத்தந்தை பிராத்திஸ்லாவா அரசுத்தலைவர் மாளிகையில் தங்க புத்தகத்தில் எழுதுகின்றார், திருத்தந்தை   (Vatican Media)

சுலோவாக்கியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை

சுலோவாக்கியா, ஐரோப்பாவின் இதயத்தில், உடன்பிறந்த உணர்வு, மற்றும், அமைதியின் செய்தியாக விளங்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 13, இத்திங்கள், திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள். இன்று காலையில், பிராத்திஸ்லாவா திருப்பீடத் தூதரகத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 9 மணியளவில், சுலோவாக்கியா குடியரசின் அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு திருத்தந்தைக்கு, இராணுவ அணிவகுப்பு மரியாதையோடு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு சிறார், ரொட்டியும், உப்பும் திருத்தந்தைக்குக் கொடுத்தனர். அரசுத்தலைவர் Zuzana Čaputová அவர்கள், அம்மாளிகையின் தங்க அறையில், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசினார். மேலும், "பிராத்திஸ்லாவாவில் திருப்பயணியாக உள்ள நான் சுலோவாக்கியா மக்களை, அன்போடு தழுவிக்கொள்கிறேன். பழங்கால வேர்களையும், ஓர் இளைய முகத்தையும் கொண்டிருக்கும் இந்நாடு, ஐரோப்பாவின் இதயத்தில், உடன்பிறந்த உணர்வு, மற்றும், அமைதியின் செய்தியாக விளங்கவேண்டும் என்பதற்காகச் செபிக்கின்றேன்" என்று அம்மாளிகையின் தங்க புத்தகத்தில், திருத்தந்தை எழுதினார். பின்னர், அந்நாட்டின் அரசு, பொதுமக்கள், தூதரகங்கள் போன்ற அனைத்தின் அதிகாரிகள் மற்றும், பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. அம்மாளிகையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், திருத்தந்தை அமர, அவரை வரவேற்று உரையாற்றினார் அரசுத்தலைவர். 1973ம் ஆண்டில் பிராத்திஸ்லாவாவில் பிறந்த அரசுத்தலைவருக்கு, இரு மகள்கள் உள்ளனர்.

அரசுத்தலைவர் உரை

அரசுத்தலைவர் சூசான்னா உரையாற்றுகிறார்
அரசுத்தலைவர் சூசான்னா உரையாற்றுகிறார்

சுலோவாக்கியாவில், கம்யூனிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின், பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.  செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து நாடு அமைதியான முறையில் பிரிந்தது. திருத்தந்தையே, தாங்கள், அறநெறி, மற்றும், ஆன்மீகத்தில் அதிகமான அதிகாரம் கொண்டவர்களில் ஒருவர். தாங்கள், நற்செய்தியை அறிவிக்கும் முறையும், அவரது தனிப்பட்ட வாழ்வும், கத்தோலிக்கர் அல்லாதவர்க்கும் எடுத்துக்காட்டாய் உள்ளன. காலநிலை மாற்றங்கள் உருவாக்கியுள்ள பிரச்சனைகளைக் களைய நாம் முன்வரவேண்டும் என்ற தங்களின் அழைப்பு செயல்படுத்தப்படவேண்டும். மரபுகளையும், நாட்டையும் மதிக்கின்ற மக்கள் மத்தியில் திருத்தந்தையே வருகைதந்துள்ளீர். "இந்த வீட்டில் விருந்தினர், இந்த வீட்டில் கடவுள்" என்ற வாசகங்களை, எம் பெற்றோரின் தலைமுறைகளும் தாத்தாக்கள் பாட்டிகளும், வீடுகளில் பொறித்து வைத்துள்ளனர்.  இத்தகைய சுலோவாக்கியாவிற்கு திருத்தந்தையே தங்களை வரவேற்கிறோம். இவ்வாறு அரசுத்தலைவர் உரையாற்றிய பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். இச்சந்திப்பை நிறைவுசெய்து, அம்மாளிகைக்கு 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித மார்ட்டீன் பேராலயத்திற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித மார்ட்டீன் பேராலயத்தில் திருத்தந்தை

புனித மார்ட்டீன் பேராலயத்தில் திருத்தந்தை
புனித மார்ட்டீன் பேராலயத்தில் திருத்தந்தை

14ம் நூற்றாண்டில் கோதிக் கலையில் கட்டத் தொடங்கப்பட்ட இப்பேராலயத்தின் நேர்ந்தளிப்பு, 1452ம் ஆண்டில் நடைபெற்றது. அப்பேராலயத்திற்கு முன்பகுதியில் கூடியிருந்த மக்கள், திருத்தந்தையைக் கண்ட ஆனந்தத்தில் கைதட்டி ஆர்ப்பரித்தனர். பிராத்திஸ்லாவா பேராயர் Stanislav Zvolensky அவர்களும், பேராலயப் பங்குத்தந்தையும், பேராலய வாயிலில் நின்று, பேராலயத்திற்குள் திருத்தந்தையை அழைத்துச் சென்றனர். தீர்த்தம் தெளிப்பதற்காக, சிலுவை மற்றும், ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீரை திருத்தந்தையிடம் கொடுத்தார், பங்குத்தந்தை. குருத்துவ மாணவர் ஒருவரும், வேதியர் ஒருவரும் அளித்த மலர்க்கொத்தை, திருநற்கருணைக்குமுன் வைத்து செபித்தார் திருத்தந்தை. அங்கு அந்நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், வேதியர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பேராயர் Stanislav அவர்கள், திருத்தந்தைக்கு நல்வரவு சொல்லி, அவரை வரவேற்றுப் பேசினார். பின்னர், திருத்தந்தையும் தன் சிந்தனைகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வின் முடிவில் ஆயர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கைகுலுக்கி வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  இச்சந்திப்பை முடித்து திருப்பீடத் தூதரகம் சென்று, மதிய உணவருந்தி, சிறிதுநேரம் ஓய்வெடுத்தார், 84 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ். 

13 September 2021, 14:39