தேடுதல்

சுலோவாக்கியா திருஅவையின் பணியாளர்களுக்கு உரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 13 இத்திங்களன்று, புனித மார்ட்டின் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவ பயிற்சி பெறுவோர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களை சந்தித்த வேளையில், அவர்களுக்கு வழங்கிய உரையின் சுருக்கம்:

என் அன்பு சகோதர ஆயர்களே, அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, பயிற்சி பெறுவோரே, அன்பு மறைக்கல்வி ஆசிரியர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.

உங்களுக்கு செவிசாய்க்க விழையும் ஒரு சகோதரனாக, உங்களிடையே நான் வந்திருக்கிறேன். நாம் இங்கு கூடியிருப்பது போல், முதல் கிறிஸ்தவ குழுமம் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். (காண்க. தி.ப. 1:2-14)

இதுவே, அனைத்திற்கும் மேலாக இன்று அதிகம் தேவையாக உள்ளது: ஒன்றாக இணைந்து, நற்செய்தியின் ஒளியை உயர்த்திப்பிடிக்கும் திருஅவை இன்று தேவைப்படுகிறது. இவ்வுலகிலிருந்து விலகி நிற்காத, எளிமையான ஒரு திருஅவை எத்துணை அழகானது! மக்களோடு தன்னையே இணைத்துக்கொள்ளும் திருஅவையை உருவாக்க என்ன தேவை? மூன்று சொற்கள் எனக்குத் தோன்றுகின்றன.

முதல் சொல், சுதந்திரம். இதற்காகவே மனிதர்கள் படைக்கப்பட்டனர். சுதந்திரம் இன்றி, உண்மையான மனிதம் இருக்கமுடியாது. சுதந்திரம் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை, உங்கள் நாட்டின் வரலாறு கூறுகிறது.

சுதந்திரம் எப்போதுமே ஒரு தொடர் நிகழ்வு. அது, வெளிப்படையான கட்டுமானங்களில் மட்டும் இருந்தால் போதாது, உள்ளார்ந்த சுதந்திரம் தேவை. நம் தனிப்பட்ட பொறுப்புணர்வையும், அர்ப்பணத்தையும் சுதந்திரம் கோருகிறது. இது நம்மை அச்சுறுத்துகிறது. ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் தனித்து முடிவெடுப்பதற்குப் பதில், கூட்டத்தோடு இணைந்து செல்வது எளிதாக இருக்கும்.

இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது, எகிப்தில் தாங்கள் வாழ்ந்த பழைய அடிமைத்தனத்திற்குத் திரும்பினால் நன்றாக இருக்குமே என்று எண்ணினர். எகிப்தில் தாங்கள் உண்ட உணவு, பாலைநிலத்தின் நிரந்தரமில்லா நிலையைவிட நல்லதாகத் தெரிந்த்து. இந்த எண்ணம், திருஅவையிலும் சிலவேளைகளில் ஊடுருவுகிறது. நமக்கென வகுக்கப்பட்ட சட்டங்களுக்கு கீழ்படிவது, பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதைவிட எளிதாகத் தெரிகிறது. இந்த காரணத்திற்காக, நம்மிடையே நிலவும் மிகக் கடினமான மதப் பாரம்பரியங்களிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டும் என்பதை நான் ஊக்கப்படுத்துகிறேன். நம் திருஅவை, சுதந்திரத்தின் ஓர் அடையாளமாக விளங்கட்டும்!

புனித மார்ட்டின் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ்
புனித மார்ட்டின் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ்

இரண்டாவது சொல், படைப்பாற்றல். புனிதர்களான சிரில் மற்றும் மெத்தோடியஸ் ஆகிய இருவரின் நற்செய்தி பறைசாற்றுதலையும், பணிகளையும் உங்கள் பாரம்பரியமாகக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் கொணர்ந்த நற்செய்தியின் மகிழ்வு கிறிஸ்துவாக திகழ்ந்தார். வரலாற்றில், இந்த நற்செய்திப்பணி, பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. கிறிஸ்துவின் நற்செய்தி, அந்தந்த இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்ப, புது வடிவங்கள் பெற்றன. இதுவே, இன்று, சுலோவாக்கியா திருஅவைக்கு அதிகம் தேவைப்படும் பண்பு. இறைவன் மீது ஆர்வம் குறைந்துள்ள இவ்வுலகில், ஐரோப்பாவில், கிறிஸ்துவையும், அவரது நற்செய்தியையும் பறைசாற்ற படைப்பாற்றலுடன் கூடிய வழிகளை இத்திருஅவை கண்டுகொள்ளவேண்டும்.

இறுதியாக, மூன்றாவது சொல், உரையாடல். சுதந்திரமாக, படைப்பாற்றலுடன் செயலாற்றும் ஒரு திருஅவை, துணிந்து, உரையாடலையும் மேற்கொள்ளும். கிழக்கு, மேற்கு ஆகிய இரு பகுதிகளின் பாரம்பரியங்களையும், பண்பாடுகளையும் இணைத்து, புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸ் ஆகிய இருவரும் நற்செய்தியைப் பறைசாற்றினர். பறைசாற்றுதல் என்பது, மற்றவர் மீது நம் கருத்தைத் திணிப்பதல்ல, மாறாக, அவர்களுடன் உரையாடலை மேற்கொள்வதாகும்.

ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, மற்றும் உரையாடல் ஆகியவை, எப்போதுமே, குறிப்பாக, காயப்பட்ட ஒரு வரலாற்றில், எளிதில் உடைந்துவிடக்கூடியவை. பழங்கால நினைவுகள் மற்றவர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்கிறது. இவ்வேளையில், இறைவனின் அருள் ஒன்றே இந்த காயங்களை குணமாக்கும். "யாராவது உன்மீது கல்லெறிந்தால், அவருக்கு நீ பதிலுக்கு ஒரு ரொட்டியைக் கொடு" என்று, நீங்கள் பயன்படுத்தும் ஓர் அழகிய பழமொழியை நினைவுறுத்த விழைகிறேன். இதையே, ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தைக் காட்டி, வன்முறைச் சங்கிலியைத் துண்டிக்கும்படி இயேசு கூறினார்.

உங்கள் நாட்டில் வாழ்ந்த கர்தினால் Ján Chryzostom Korec அவர்களின் வாழ்வில் நடந்த ஓர் அழகிய நிகழ்வு என்னை எப்போதும் கவர்ந்துள்ளது. இயேசு சபையைச் சேர்ந்த கர்தினால் Korec அவர்கள், அப்போதைய அரசால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டு, வதை முகாம்களில் துன்புற்றார். அவர் 2000மாம் ஆண்டு, உரோம் நகருக்குச் சென்றபோது, துவக்ககால கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட நிலத்தடி கல்லறைகளுக்கு சென்று, அங்கு ஒரு மெழுகுதிரியை ஏற்றிவைத்து, தன்னை கொடுமைப்படுத்தியவர்களுக்காக வேண்டிக்கொண்டார். இதுதான் நற்செய்தி!

அன்பு நண்பர்களே, நாம் கூடிவந்துள்ள இந்த தருணத்திற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நற்செய்தியின் சுதந்திரம், நம்பிக்கையின் படைப்பாற்றல், மற்றும் உரையாடல், ஆகிய வழிகளில் உங்கள் பயணம் தொடர, இறைவனிடம் வேண்டுகிறேன். உங்கள் அனைவருக்கும், என் ஆசீரை வழங்குகிறேன். எனக்காக செபிக்க மறவாதீர்கள். நன்றி!

13 September 2021, 13:49