தேடுதல்

பிராத்திஸ்லாவா விமான நிலையத்தில் திருத்தந்தைக்காக காத்திருக்கும் மக்கள் பிராத்திஸ்லாவா விமான நிலையத்தில் திருத்தந்தைக்காக காத்திருக்கும் மக்கள்  

சுலோவாக்கியா குடியரசு, பிராத்திஸ்லாவா

ஆஸ்ட்ரியா, மற்றும், ஹங்கேரி ஆகிய இரு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ள பிராத்திஸ்லாவா, உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக்கொண்ட ஒரேயொரு தலைநகரமாக விளங்குகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான்கு நாள் கொண்ட தன் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் மூன்று நாள் நிகழ்ச்சிகளை நிறைவேற்றும் நாடு சுலோவாக்கியா. மத்திய ஐரோப்பாவில் நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள இந்நாடு, மேற்கே செக் குடியரசு, மற்றும், ஆஸ்ட்ரியா, வடக்கே போலந்து, கிழக்கே உக்ரைன், தெற்கே ஹங்கேரி ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது. ஐந்து, மற்றும், ஆறாம் நூற்றாண்டுகளில், இப்போதைய சுலோவாக்கியா நிலப்பகுதியில், ஸ்லாவ் இன மக்கள் குடியேறினர். இப்பகுதி, பல ஆண்டுகள், மங்கோலியர், ஆஸ்ட்ரியப் பேரரசு, ஹங்கேரி பேரரசு போன்றவர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. முதல் உலகப் போருக்குப்பின், ஆஸ்ட்ரிய-ஹங்கேரி பேரரசு கலைக்கப்பட்டதையடுத்து, இப்பகுதி, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடாக உருவானது. 1948ம் ஆண்டில் செக்கோஸ்லோவாக்கியா, கம்யூனிச நிர்வாகத்தின்கீழ் வந்து, முன்னாள் சோவியத் யூனியனில் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1989ம் ஆண்டில் இடம்பெற்ற புரட்சிக்குப்பின், செக்கோஸ்லோவாக்கியா, கம்யூனிச ஆதிக்கத்திலிருந்து அமைதியாகப் பிரிந்தது. 1993ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று, செக்கோஸ்லோவாக்கியா நாடு, செக், சுலோவாக் என இரு குடியரசுகளாக, அமைதியான முறையில் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவு, சிலநேரங்களில் வெல்வெட் பிரிவு என்றும் அழைக்கப்படுகின்றது. சுலோவாக்கியா குடியரசு என்று அதிகாரப்பூர்வப் பெயரைக்கொண்டுள்ள இந்நாடு, உலகில் வாகனத் தயாரிப்புக்களுக்குப் புகழ்பெற்றது. இந்நாடு, 2019ம் ஆண்டில் 11 இலட்சம் வாகனங்களைத் தயாரித்துள்ளது. பிராத்திஸ்லாவா, சுலோவாக்கியா குடியரசின் தலைநகரம் ஆகும். சுலோவாக்கியாவின் தென்மேற்குப் பகுதியில், டான்யூப் ஆற்றின் இரு மருங்கிலும் அமைந்துள்ள இந்நகரம், ஆஸ்ட்ரியா, மற்றும், ஹங்கேரி ஆகிய இரு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரேயொரு தலைநகரம், இதுவாகும். சுலோவாக்கியா நாட்டின், அரசியல், கலாச்சார, மற்றும், பொருளாதார மையமாக விளங்கும் பிராத்திஸ்லாவாவில், பல்வேறு பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்கள் அமைந்துள்ளன. 2017ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பணக்கார நகரமாக குறியிடப்பட்ட இந்நகருக்கு, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய பத்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2021, 14:22