தேடுதல்

Šaštín நகரின் 7 துயரங்களின் துயருறும் அன்னை மரியா திருத்தலம் Šaštín நகரின் 7 துயரங்களின் துயருறும் அன்னை மரியா திருத்தலம் 

Šaštín நகரின் 7 துயரங்களின் துயருறும் அன்னை மரியா திருத்தலம்

சுலோவாக்கியா நாட்டின் Šaštín நகர் ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியாவை, 1927ம் ஆண்டில், திருப்பீடம், அந்நாட்டின் பாதுகாவலராக அறிவித்தது.

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 15, இப்புதன், துயருறும் அன்னை மரியா திருநாள். உலக அளவில், புகழ்பெற்ற துயருறும் அன்னை மரியா திருத்தலங்களில், சுலோவாக்கியா நாட்டின் Šaštín தேசிய திருத்தலமும் ஒன்று. இவ்வன்னை மரியா, Sastin நகரில், ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியா என்ற பெயரில் வணங்கப்பட்டு வருகிறார். 1927ம் ஆண்டில், திருப்பீடம், துயருறும் அன்னை மரியாவை, சுலோவாக்கியா நாட்டின் பாதுகாவலராக அறிவித்தது.  Záhorie பகுதியில், Šaštín-Stráže என்ற நகரில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு, கடந்த 450 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வோர் ஆண்டும், உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் இவ்வாறு செல்வதற்கு ஒரு பின்னணியும் உள்ளது. 1564ம் ஆண்டில், பிரபு Imrich Czobor அவர்களும், அவரது மனைவி Angelika Bakič அவர்களும், ஒட்டமான்களுக்கு அஞ்சி, Šaštín நகர் காடுகளில் ஒளிந்துகொண்டனர். பிரபு Czobor அவர்கள், தனது மனைவியை மிக மோசமாக நடத்தி, அந்தக் காட்டிலேயே தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவ்விருவரின் திருமண வாழ்வும் மகிழ்ச்சியானதாக இல்லை. எனவே, அந்தக் காட்டில் தனித்துவிடப்பட்ட, அந்த பிரபுவின் மனைவியான ஆஞ்லிக்கா அவர்கள், அன்னை மரியாவிடம், தனது பாதுகாப்பிற்காகவும், தன் திருமண வாழ்வின் பிரச்சனைகள் தீரவேண்டும் என்பதற்காகவும் செபித்தார். தன் வேண்டுதல் நிறைவேறினால், அதற்கு நன்றியாக, ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியாவுக்கு மரத்தால் திருவுருவம் ஒன்றைச் செய்துவைப்பதாகவும் அவர், தன் செபத்தில் உறுதி கூறினார். அவரது செபமும் கேட்கப்பட்டது. அன்று முதல், அவரும், அவரது கணவரும் மகிழ்ச்சியாகவும், நல்லிணக்கத்தோடும் திருமண வாழ்வை மேற்கொண்டனர். மேலும், அவர்கள், ஆஞ்சலிக்கா செபித்த இடத்தில், ஒரு தூணின்மீது, துயருறும் அன்னை மரியா திருவுருவத்தை மரத்தால் செய்து வைத்தனர். மேலும் அந்த இடத்தில் அவ்வன்னையின் பரிந்துரையால், அற்புதங்களும் நடைபெறத் துவங்கின.

7 துயரங்களின் துயருறும் அன்னை மரியா
7 துயரங்களின் துயருறும் அன்னை மரியா

திருத்தந்தை 12ம் கிளமென்ட் அவர்கள், துயருறும் அவ்வன்னையின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமைகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆணையிட்டார். 1732ம் ஆண்டில் அற்புதங்கள் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டது. அதற்குப்பின், 1733ம் ஆண்டில், அத்திருத்தந்தை, அவ்வன்னை மரியாவின் திருவுருவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை, புனித பவுல் துறவு சபையினரிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து, 1736ம் ஆண்டில், புனித பவுல் துறவு சபையினர், அங்கு திருப்பயண ஆலயம், துறவு இல்லத்தையும் அமைத்தனர். 1762ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, பேரரசி மரிய தெரேசா, மற்றும் அவரது கணவர் பிரான்சிஸ் ஸ்டீபன் ஆகிய இருவரது பிரசன்னத்தில், அந்த ஆலய நேர்ந்தளிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. அதற்கு மூன்று நாள்களுக்குப்பின், அற்புதங்களை நிகழ்த்திவந்த அவ்வன்னை மரியாவின் திருவுருவம், ஆலயத்தின் மையத்தில், பளிங்குப் பீடத்தில் வைக்கப்பட்டது. அச்சமயத்தில், கிழக்கு ஐரோப்பாவில், பாரூக் கலையில் கட்டப்பட்ட மிக நீளமான ஆலயங்களில் ஒன்றாகவும், இது அமைந்திருந்தது. பேரரசர் 2ம் யோசேப்பு அவர்கள், புனித பவுல் துறவு சபையைக் கலைத்தபின்னர், அச்சபையினர் Šaštín நகரைவிட்டு, போலந்து நாட்டிற்குச் சென்றனர். 1924ம் ஆண்டில், சலேசிய சபையினர் Šaštín நகரில் மறைப்பணியைத் தொடங்கினர். 1964ம் ஆண்டில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், இந்த திருத்தலத்தை, மைனர் பசிலிக்காவாக அறிவித்தார். இது, சுலோவாக்கியாவில் இவ்வாறு அறிவிக்கப்பட்ட முதல் திருத்தலமும் ஆகும். துயருறும் அன்னை மரியா திருநாளான, செப்டம்பர் 15ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும் அத்திருத்தலத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சுலோவாக்கியா அரசுத்தலைவரின் அலுவலகத்தின் பிரதிநிதிகள், அரசு மற்றும், நாடாளுமன்ற பிரதிநிதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் போன்ற அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இத்திருநாள், அந்நாட்டின் முதியோர், மற்றும், மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் திருப்பயணத்தோடு இத்திருநாள் நிறைவுக்கு வருகின்றது. 62 மீட்டர் நீளம், மற்றும், 23 மீட்டர் அகலத்தைக் கொண்டிருக்கின்ற இத்திருத்தலத்தில், ஆறு சிறிய பீடங்கள் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2021, 14:31