தேடுதல்

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைய முயலும் மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைய முயலும் மக்கள் 

ஆப்கான் நிலை, அமெரிக்க வெள்ளப்பெருக்கு குறித்து கவலை

அப்பாவி ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது, உலக நாடுகள் அவர்களை வரவேற்று பாதுகாப்பு வழங்கவேண்டிய கடமையை வலியுறுத்திய திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வரும் அப்பாவி மக்கள், உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளோர், அந்நாட்டு இளைய தலைமுறையினரின் வருங்காலம், ஆகியவைக் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆப்கான் நாட்டைவிட்டு வெளியேறிவரும் அப்பாவி மக்கள் குறித்த ஆழ்ந்த கவலையை செப்டம்பர் 5, ஞாயிற்றுக்கிமை நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பாவி ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது, உலக நாடுகள் அவர்களை வரவேற்று பாதுகாப்பு வழங்கவேண்டிய கடமையை வலியுறுத்தினார்.

ஆப்கான் நாட்டிற்குள்ளேயே குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை, இளையோர், அவர்களுக்குத் தேவையான கல்வி, மனித வளமேம்பாடு, ஆகியவற்றைப் பெற உறுதி வழங்கப்படுவதுடன், அனைத்து ஆப்கான் மக்களும், அவர்கள், எப்பகுதியில் வாழ்ந்தாலும், மாண்புடனும், அமைதியிலும், உடன் வாழ்வோரோடு உடன்பிறந்த உணர்வுடனும் வாழ வழிவகைச் செய்யப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, தான் செபிப்பதாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ ஜெர்சி, நியூ யார்க், மற்றும் லூயிசியானா பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கால், உயிரிழப்புக்களும் பொருள்சேதங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், இதனால் துயருறுவோரின் ஆறுதலுக்கும் இறைவனை நோக்கி வேண்டுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புக்கள் உலகில் இடம்பெற்றுவரும் வேளையில், அனைத்து யூதர்களுக்கும் தன் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2021, 15:03