தேடுதல்

சுலோவாக்கிய அரசுத்தலைவருடன் திருத்தந்தை சுலோவாக்கிய அரசுத்தலைவருடன் திருத்தந்தை 

அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், அரசுத் தூதர்களுக்கு உரை

அப்பம், அனைவருக்கும் சரியான முறையில் பகிரப்படவேண்டும் என்பது, நீதியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி நிற்கின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள ஓர் இளம் நாட்டிற்கு திருப்பயணியாக வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எப்போதும், மேற்கத்திய மற்றும் கீழை வழிபாட்டுமுறைகளுக்கு இடையே, சந்திப்புச் சாலையாக இருந்துள்ளது.

பல்வேறு துயர்களை, கடந்த காலங்களில் அடைந்துள்ள சுலோவாக்கியா நாடு, அமைதியான நடவடிக்கைகள் வழியாகவே தன் தனித்தன்மையைக் காப்பாற்றிவருவது குறிப்பிடும்படியானது. 28 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கு, அமைதியான முறையில், இரு தனித்தனி நாடுகள் உருவெடுத்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்நாட்டின் வரலாறு, எப்போதும், விசுவாசத்தால் குறியிடப்பட்ட ஒன்றாக உள்ளது. விசுவாசம் என்பது, இயல்பிலேயே, உடன்பிறந்த நிலையால் ஊக்கம்பெறும் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், புனித சகோதரர்கள் சிரில், மற்றும் மெத்தோடியஸின் அனுபவங்களிலிருந்து பலம்பெறுகிறது. இந்நாட்டின் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தபோது, இச்சகோதரர்கள், நற்செய்தியை அறிவித்தனர்.

விருந்தோம்பல் என்பது, உங்கள் கலாச்சாரத்தின் முக்கியக் கூறாக உள்ளது. வரவேற்பின் ஒரு பகுதியாக, விருந்தினருக்கு ரொட்டியையும், உப்பையும் வழங்கும் உங்களின் பழக்கம் குறித்து, இங்கு சிறிது பேசவிழைகிறேன். இறைவனும், நம்மிடையே குடிகொள்ள, அப்ப வடிவையே தெரிந்துகொண்டார். அப்பத்தை மற்றவர்களுடன் பகிரவேண்டும் என, விவிலியம், நம்மிடம் அழைப்புவிடுக்கிறது. துன்புறும் நம் சகோதரர் சகோதரிகளை, ஒரு சுமையாக நோக்காமல், சகோதரர்களாக, சகோதரிகளாக நோக்கி, உதவவேண்டும்.

அப்பம், அனைவருக்கும் சரியான முறையில் பகிரப்படவேண்டும் என்பது, நீதியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி நிற்கின்றது. சரிநிகர் சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட்டு, எங்கும் அமல்படுத்தப்படவேண்டும். அனைவருக்கும், தினசரி அப்பம் கிட்டவேண்டுமானால், வேலைவாய்ப்புக்கள் கிட்டவேண்டியது அவசியம். அத்தகைய ஒரு நிலை உருவாக்கப்படும்போதுதான், பலர், நல்ல வாழ்க்கையைத் தேடி, நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படமாட்டார்கள்.

அடுத்து, உப்பைக் குறித்து நோக்கும்போது, அதுதான் உணவிற்கு சுவையை வழங்குகின்றது. உணவுக்குச் சுவையூட்ட தேவைப்படும் உப்பைப் போல, நம் வாழ்வுக்குச் சுவையூட்ட, ஒருமைப்பாடு எனும் உப்பு தேவைப்படுகின்றது. எவ்வாறு உப்பு உணவுக்குள் தன்னையேக் கரைத்து, சுவையை வழங்குவதுபோல், சமுதாயத்திலும் பலர் தங்களையே தியாகம்செய்து, பிறரின் வாழ்வில் சுவையூட்டியுள்ளனர். வருங்காலத்தை வடிவமைக்க ஆவல் கொண்டுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இந்த எடுத்துக்காட்டு தூண்டுதலாக இருக்கட்டும். இளையோரின்றி, புதுப்பித்தல் இடம்பெற முடியாது. 

நுகர்வுக் கலாச்சாரத்தின் மிகுதியால், வாழ்வில், சோர்வையும், விரக்தியையும் சந்தித்துவரும் ஐரோப்பியக் கலாச்சாரத்தில், பிறர் மீது காட்டப்படும் அக்கறையின் வழியாக, இவைகளை சரிசெய்ய முடியும். பிறருக்கு உதவும்போது, நம் வாழ்வுக்கு நாம் சுவையூட்டுகிறோம்.

இயேசுவின் காலத்தில், உப்பு சுவையூட்டுவதற்கு மட்டுமல்ல, உணவை நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டது. நீங்களும், உங்களின் உயரிய பாரம்பரிய பண்பாடுகளின் சுவையை, நுகர்வுக் கலாச்சாரத்திலும், இலாபம் ஈட்டும் நோக்கத்திலும் இழந்துவிடாதீர்கள்.

பலவந்தத்தின் பேரில் அல்ல, மாறாக, கலாச்சாரத்திற்கும் உயர்வைத் தரும் வகையில் நற்செய்தியை அறிவித்தனர், புனிதர்கள் சிரிலும், மெத்தோடியசும். இன்றும், பிறரன்பின் சாட்சியங்கள் வழியாக, நற்செய்தியின் விதைகளைத் துவுவோம். இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, தூண்டுதலாக இருக்கட்டும். ஒருவர் தன் வேர்களை இழந்துவிடாமல், புதியனவற்றிக்கு தன்னை திறந்ததாகச் செயல்படவேண்டும் என்பதை புனிதர்கள் சிரிலும், மெத்தோடியசும், காண்பித்துச் சென்றுள்ளனர். இந்நாட்டின் உப்பாகச் செயல்பட்ட எண்ணற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலாச்சாரத்தின் மனிதர்களை வரலாறு கண்டுள்ளது. காயத்தின்மீது உப்பு படும்போது, எவ்வாறு எரிச்சல் ஏற்படுமோ, அதேபோல், இவர்களுள் பலர் துயர்களை அனுபவித்துள்ளனர். இருப்பினும், அத்துயர்களை, வீரத்துடனும், நேர்மையுடனும், அநீதிக்கு எதிரான நிலைப்பாட்டுடனும், அனைத்திற்கு மேலாக, மன்னித்தலுடனும் வெற்றி கண்டுள்ளனர். இதுவே உங்கள் பூமியின் உப்பு.

இன்றையப் பெருந்தொற்று, நம் காலத்தின் பெரும் சோதனயாக உள்ளது. நாம் அனைவரும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்ட நிலையிலும், நம்மை நாம் தனிமைப்படுத்திக்கொண்டு, நம்மைப்பற்றி மட்டுமே எண்ணும் நிலைகளையும் கண்டுவருகிறோம். ஆனால், நாம் அனைவரும் பலவீனமானவர்கள், ஒவ்வொருவருக்கும் மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்பதை எண்ணிப்பார்ப்போம். தனி மனிதனாகவோ, தனி நாடாகவோ எவரும் தனித்து நின்று செயல்படமுடியாது.

கடந்தகாலம் குறித்த குற்றச்சாட்டுகளை கைவிட்டு, வருங்காலத்தை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப முன்வருவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து ஒரே குடும்பமாக அணைத்துச் செல்வதிலும், பொறுமையும், முயற்சியும், மனஉறுதியும், பகிர்தலும், ஆர்வமும், படைப்புத்திறனும் தேவைப்படுகின்றன. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

13 September 2021, 14:46