தேடுதல்

திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றவுள்ள புடாபெஸ்ட் தியாகிகள் வளாகம் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றவுள்ள புடாபெஸ்ட் தியாகிகள் வளாகம்  

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் - ஒரு முன்தூது

ஹங்கேரி, மற்றும், சுலோவாக்கியா நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும், இந்த திருத்தூதுப் பயணம், ஐரோப்பாவின் இதயத்திற்கு மேற்கொள்ளும் ஒரு திருப்பயணம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

செப்டம்பர் 5, இஞ்ஞாயிறு முதல், ஹங்கேரியில் இடம்பெற்றுவரும் 52வது திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை, வருகிற ஞாயிறன்று, அதாவது செப்டம்பர் 12ம் தேதி, நிறைவேற்றச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றே சுலோவாக்கியா நாட்டிற்குச் சென்று அந்நாட்டில் தன் மூன்று நாள் பயணத்தைத் துவக்க உள்ளார். ஹங்கேரி நாட்டில் இடம்பெற்றுவரும் உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றவே அந்நாட்டிற்குச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகவே, அந்நாட்டில் ஏனைய நகர்களைச் சென்று சந்திப்பது அவரின் பயணத்திட்டத்தில் இல்லை. ஹங்கேரியில் 52வது திருநற்கருணை மாநாட்டை நிறைவுச் செய்வதுடன் துவங்கும் திருத்தந்தையின்  திருத்தூதுப்பயணம், சுலோவாக்கியாவில் 15ம் தேதி அந்நாட்டின் பாதுகாவலரான, துயருறும் அன்னை மரியாவின் திருவிழாக் கொண்டாட்டங்களுடன் நிறைவுக்கு வரும்.

ஹங்கேரி நாட்டின் அமைப்பு

ஹங்கேரி நாடு, வடக்கே சுலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், ருமேனியா, தெற்கே செர்பியா, குரோவேசியா, தென்மேற்கே சுலோவேனியா, மேற்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. புடாபெஸ்ட் இதன் தலைநகராக உள்ளது.  பல நூற்றாண்டுகளாக கெல்ட்டியர், உரோமையர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள், 9ம் நூற்றாண்டின் இறுதியில், ஹங்கேரி நாடாக, ஹங்கேரிய இளவரசர் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்தேவான், 1000மாம் ஆண்டில் ஹங்கேரியை கிறித்தவ நாடாக மாற்றி அதன் அரசரானார். 12ம் நூற்றாண்டில் ஹங்கேரி, மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது. அடுத்து, ஹங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு உதுமானியரின் ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் 1867-1918 காலப்பகுதியில் ஆஸ்திரிய-ஹங்கேரிய ஆதிக்கத்தின் கீழும் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஹங்கேரி, சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்தின்கீழ் வந்தது. இதனால் அங்கு 1947ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது.1989ல் ஆஸ்திரியாவுடன் உள்ள எல்லைப் பகுதியை அது திறந்துவிட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 1989ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று ஹங்கேரி, மக்களாட்சி நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

புடாபெஸ்ட்டில் திருத்தந்தை

செப்டம்பர் 12ம் தேதி உள்ளூர் நேரம் காலை 7.45 மணிக்கு ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டை சென்றடையும் திருத்தந்தை, விமான நிலையத்தில் அந்நாட்டு துணைப்பிரதமரால் வரவேற்கப்பட்டபின், தலைநகரின் தியாகிகள் வளாகம் நோக்கி 22 கிலோமீட்டர் தூரம் காரில் பயணம் செய்து, அங்கு, அரசுத்தலைவரையும் பிரதமரையும் சந்தித்து சிறிது நேரம் உரையாடுவார். பின்னர், அந்நாட்டு ஆயர்களையும், பல்சமயப் பிரதிநிதிகளையும் சந்தித்தபின், 52வது திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியில் கலந்துகொள்வார். இத்துடன் அந்நாட்டிற்கான தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, அதாவது, 7மணி நேர பயணத்தை நிறைவு செய்து, உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணி 45 நிமிடங்களுக்கு அந்நாட்டிலிருந்து விடைபெற்று, சுலோவாக்கியா நாடு செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுலோவாக்கியா நாடு

சுலோவாக்கியா நாடு, ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ளது. சுலோவாக்கியாவின் தலைநகரம் பிராத்திஸ்லாவா ஆகும். ஹங்கேரியின் கட்டுப்பாட்டின்கீழ் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு மேலாக சுலோவாக் மக்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கம் மற்றும் தாய் மொழியை மறந்துவிடவில்லை.  இது ஐரோப்பாவின் அரசியல் வரைபடத்தில் 1993ல் தோன்றிய மிக இளம் அரசு. ஹங்கேரிய ஆட்சியின் நீண்ட காலம், 1918ல் முடிந்தது. இன்றைய சுலோவாக்கியா, செக் மற்றும் சுலோவாக்கியர்கள் வாழ்ந்த மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சுலோவாக்கியர்களின் முன்னோர்கள், புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸிடமிருந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், 10 ஆம் நூற்றாண்டில், இந்த நிலங்களில் ஹங்கேரியப் படையெடுப்புத் தொடங்கியது, இது இந்த மாநிலத்தை அழித்தது. அதன்பிறகு, சுலோவாக் நிலங்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1848ம் ஆண்டின் புரட்சிக்குப் பிறகு, ஹங்கேரியர்கள், சுலோவாக் மொழியையும் தேசிய கலாச்சாரத்தையும் ஒடுக்கத் தொடங்கினர். 1918ன் இறுதியில், செக்கோஸ்லோவாக்கியாவின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டது. 1938ல், நாடு பிளவுபட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி போலந்திற்குச் சென்றது, இன்னொரு பகுதி ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டது. மீதமுள்ளவை ஜெர்மன் துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. நாத்ஸி படையெடுப்பாளர்களிடமிருந்து விடுதலையான பின்னர், கம்யூனிஸ்டுகள் நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 1989ம் ஆண்டில், கம்யூனிச அமைப்பு மாறியது, ஒரு புதிய கூட்டாட்சி குடியரசின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டது, சுலோவாக் மற்றும் செக் மக்கள் பிரதிநிதிகள், சமமான முறையில் நுழைந்தனர். 1992இல், செக் மற்றும் சுலோவாக் சமூகங்களின் பிரதிநிதிகள் செக்கோஸ்லோவாக்கியாவைப் பிரிக்க ஒப்புக்கொண்டனர். ஐரோப்பாவின் அரசியல் வரைபடத்தில் சுலோவாக்கியா தோன்றியது இப்படித்தான்.

சுலோவாக்கியாவில் கிறிஸ்தவம்

53 இலட்சத்து 97 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட சுலோவாக்கியாவில் 65.8 விழுக்காட்டு கத்தோலிக்கர்கள் உள்ளனர். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால், 62 விழுக்காட்டினர் இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர், ஏனைய 3.8 விழுக்காட்டினர், கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டு முறையினர். திருப்பீட புள்ளிவிவர கணக்குகளின்படி, 2019ம் ஆண்டில், உலகில் 134 கோடியே 50 இலட்சம் கத்தோலிக்கர்கள் இருந்தனர். இதில் 21.2 விழுக்காட்டினர் ஐரோப்பிய கண்டத்தில் உள்ளனர். பாரம்பரியமாக கத்தோலிக்க விசுவாசத்தில் வாழ்ந்துவரும் சுலோவாக்கியாவில், அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் கத்தோலிக்கராக இருப்பது, ஐரோப்பிய கண்டத்தின் விசுவாசத்தை பறைச்சாற்றுவதாக உள்ளது. 1100 ஆண்டுகளுக்கு மேலாக, சுலோவாக்கியாவில் தனிச்சிறப்பிடத்தைக் கொண்டுள்ளது கத்தோலிக்க திருஅவை. 880ம் ஆண்டுகளிலேயே மறைப்பணிகள் இந்நாட்டில் துவக்கப்பட்டுள்ளன. பேராயர் புனித மெத்தடியஸின் காலத்தில், இங்கு கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து, பல நாடுகள் சுதந்திரத்தை அனுபவித்தவேளையில், சுலோவாக்கியா நாடோ (செக் மற்றும் ஸ்லோவாக்கியா இணைந்த செக்கஸ்லோவாக்கியா நாடு), கம்யூனிச அதிகாரத்தின்கீழ் சென்றது. கத்தோலிக்க திருஅவை, ஒடுக்கப்பட்டு எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்தது. இது 1989ம் ஆண்டுவரைத் தொடர்ந்தது. பல கிறிஸ்தவ நிறுவனங்கள் கம்யூனிச அரசால் ம பறிமுதல் செய்யப்பட்டன. ஆயர்கள், அருள்பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள், தங்கள் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டனர். புதிதாக எவரையும் துறவு சபைகளில் நவதுறவிகளாக இணைக்கப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. பலர் மறைச்சாட்சிகளாக உயிரைக் கையளித்தனர்.

1989 நவம்பர் மாத புரட்சிக்குப்பின்தான், ஓரளவு நிலைமை சீர்செய்யப்பட்டு, ஆயர்களின் புதிய நியமனம் துவங்கியது. 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவரக்ளின் இந்நாட்டிற்கான திருப்பயணமும் இடம்பெற்றது. செக்கஸ்லோவாக்கியா நாட்டில் ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இடம்பெற்ற திருத்தூதுப்பயணத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டு, அதாவது, 1990ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதரையும் நியமித்தார் திருத்தந்தை. 1993ம் ஆண்டு செக் மற்றும் சுலோவாக் குடியரசுகள் அமைதியான முறையில் தனித்தனியாகப் பிரிந்ததைத் தொடர்ந்து, சுலோவாக்கிய ஆயர் பேரவையும் உருவாக்கப்பட்டது. 40 ஆண்டுகளாக கம்யூனிச ஆடசியின்கீழ் அனுபவித்த துன்பங்களைக் களையவும், திருஅவையைக் கட்டியெழுப்பவும், தலத்திருஅவை அதிகாரிகள் 20 ஆண்டுகள் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 2014ம் ஆண்டு இந்நாட்டில், ஏழு துயரங்களின் அன்னை மரியா ஆண்டு கொண்டாடப்பட்டது. Sastin நகரில் அன்னை மரியாவின் பரிந்துரையின் பேரில் புதுமை ஒன்று இடம்பெற்றதன் 450ம் ஆண்டை முன்னிட்டும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால், சுலோவாக்கியாவின் பாதுகாவலராக, ஏழு துயரங்களின் அன்னை மரியா அங்கீகரிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2014ல் இது சிறப்பிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துள்ள சுலோவாக்கிய திருஅவை, அவைகளை மறந்துவிடாமல், தற்போது துயருறும் திருஅவைகளுக்கு, குறிப்பாக, ஈராக்கின் கிறிஸ்தவர்கள், ஜோர்டன் மற்றும் லெபனோனில் வாழும் புலம்பெயர்ந்தோர் என  பெருமளவில் உதவிகளை ஆற்றிவருகின்றது.

செப்டம்பர் 12, ஞாயிறு பிற்பகலில் சுலோவாக்கியா நாட்டின் தலைநகர் Bratislavaவில் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை, அந்நாட்டின் Prešov, Košice, Šaštin ஆகிய மூன்று நகரங்களிலும் பயணத்திட்டங்களை நிறைவேற்றுவார். அந்நாட்டில் வாழ்கின்ற யூத குழுமத்தினரையும் திருத்தந்தை சந்திக்க உள்ளார். ஹங்கேரி, மற்றும், சுலோவாக்கியா நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும், அவரின் இந்த 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம், ஐரோப்பாவின் இதயத்திற்கு மேற்கொள்ளும் ஒரு திருப்பயணமாகவும் உள்ளது. 52வது உலக திருநற்கருணை மாநாட்டை நிறைவு செய்வதற்காக புடாபெஸ்ட் நகரில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், திருநற்கருணையின் மேன்மையை உலகுக்கு உணர்த்திக்காட்டும் திருப்பயணமாக அமையும் அதேவேளை, சுலோவாக்கியாவில், சர்வாதிகாரத்தால் காயமடைந்துள்ள மக்களுக்கு அன்போடு ஆறுதல் வழங்கும் பயணமாக இருக்கும் எனவும் உறுதியுடன் நம்புவோம். இத்திருத்தூதுப் பயணத்திற்கான நம் செபங்களுடன் ஆன்மீக முறையில் திருத்தந்தையுடன் இத்திருப்பயணத்தில் இணைவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2021, 16:00