தேடுதல்

படைப்பு படைப்பு 

திருத்தந்தை: இப்பூமியைப் புண்படுத்தும் செயல்களைத் தவிர்ப்போம்

படைப்பைக் கையாள்வதைப் பொருத்தவரை, நம் வாழ்க்கைமுறையை மிக எளிமையானதாகவும், மதிப்புமிக்கதாயும் அமைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிவுசெய்வோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாம் பயன்படுத்தும் பொருள்கள், இப்பூமியை எவ்வாறு புண்படுத்துகின்றன என்பது பற்றி சிந்தித்து, வாழும்முறையை மாற்றிக்கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 28, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தி வழியாக அழைப்புவிடுத்துள்ளார். 

இம்மாதம் முதல் தேதியிலிருந்து, வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தை மையப்படுத்தி, படைப்பின் காலம் (#SeasonOfCreation) என்ற ஹாஷ்டாக்குடன், குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, நாம் வாழ்கின்ற இப்பூமிக்கோளத்தை சூழலியல் அழிவிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“நலவாழ்வு, சமுதாயம், சூழலியல் ஆகியவை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இக்காலக்கட்டத்தில், நாம் பயன்படுத்தும் பொருள்கள், இப்பூமிக்கு எத்தகைய சேதங்களை விளைவிக்கின்றன என்பதுபற்றிச் சிந்திப்போம். படைப்பைக் கையாள்வதைப் பொருத்தவரை, நம் வாழ்க்கைமுறையை மிகவும் எளிமையானதாகவும், மதிப்புமிக்கதாயும் அமைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிவுசெய்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.           

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “வாழ்க்கை நமக்கு வழங்கும் வாய்ப்புக்களுக்கு நன்றியோடும், நாம் வைத்திருக்கும் பொருள்கள்மீது ஆன்மீக ரீதியில் பற்றறுத்தும், நம்மிடம் குறைவுபடுவதை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்துவிடாமலும்  இருக்கவும், சிறிய பொருள்களைப் பாராட்டவும், கிறிஸ்தவ ஆன்மீகம், தாழ்ச்சி, மற்றும், எளிமையைப் பரிந்துரைக்கிறது” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம் (24,1) என்ற திருப்பாடல் வரிகளை மையப்படுத்தி, “அனைவருக்கும் ஓர் இல்லம், கடவுளின் முகத்தைப் புதுப்பித்தல்” என்ற தலைப்பில், இவ்வாண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அச்சி நகர் புனித பிரான்சிசின் விழாவாகிய அக்டோபர் 4ம் தேதி வரை, கிறிஸ்தவர்கள், படைப்பின் காலத்தை சிறப்பித்துவருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2021, 15:38