தேடுதல்

Vatican News
Laudato Si’ அமைப்பினர்  சந்திப்பு Laudato Si’ அமைப்பினர் சந்திப்பு  (@VaticanMedia)

உலகை குணப்படுத்த, ஒருவர் ஒருவர் மீது அக்கறை

படைப்பின் மீதும், சமுதாயத்தில், புறக்கணிக்கப்பட்டோர், வறியோர் போன்ற அனைவர் மீதும் நாம் அக்கறை காட்டாவிட்டால், உலகை நம்மால் குணப்படுத்தமுடியாது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாம், ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டுவதால் விளையும் நன்மைகள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 03, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நாம் வலுவற்றவர்கள் மற்றும், ஒருவர் ஒருவரோடு தொடர்புகொண்டுள்ளவர்கள் என்பதை, பெருந்தொற்று மிக அதிகமாகவே நமக்கு உணர்த்தியுள்ளது. படைப்பின் மீதும், வறியோர், புறக்கணிக்கப்பட்டோர், பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டோர் போன்ற எல்லார் மீதும் நாம் அக்கறை காட்டாவிட்டால், உலகை நம்மால் குணப்படுத்த முடியாது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆறு மாதங்களில் முதன்முறையாக, தன் வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை, இம்மாதம் 12ம் தேதி துவக்கவுள்ளார். அன்று ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட் செல்லும் திருத்தந்தை, அந்நகரில் நடைபெறும் 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவு நிகழ்வான திருப்பலியை நிறைவேற்றுவார்.

இவ்வாண்டு பிப்ரவரியில், வத்திக்கானில் திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசிய ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்கள், அச்சமயத்தில், திருத்தந்தையை, தன் நாட்டுக்கு வருகைதரும்படி அழைத்தார் எனவும், கத்தோலிக்கரான இவர், 52வது உலக திருநற்கருணை மாநாட்டில் சான்றுபகர்வார் எனவும், இம்மாநாட்டின் பொதுச்செயலர் KORNÉL FÁBRY அவர்கள் அறிவித்துள்ளார்.

52வது உலக திருநற்கருணை மாநாட்டின் துவக்க நிகழ்வாக நடைபெறும் திருப்பலியில், 1200 சிறார், புதுநன்மை வாங்குவார்கள் என்றும், FÁBRY அவர்கள் கூறியுள்ளார்.

ஹங்கேரி நாட்டிலிருந்து, அதன் அண்டை நாடான சுலோவாக்கியா செல்லும் திருத்தந்தை, அந்நாட்டில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு, இம்மாதம் 15ம் தேதி வத்திக்கான் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

03 September 2021, 14:59