தேடுதல்

Mercede அன்னை மரியா Mercede அன்னை மரியா  

நவீன அடிமைமுறையில் துயருறும் மக்களுக்காக மன்றாடுவோம்

நவீனகால அடிமைமுறைக்குப் பலியாகியுள்ள நம் சகோதரர், சகோதரிகளின் துன்பங்களைப் புறக்கணியாதிருப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவீனகால அடிமைமுறையில் சிக்கியிருக்கும் மக்களின் அடிமைச்சங்கிலிகளைத்  அறுத்தெறிந்து, அவர்கள் மாண்புடன் வாழ, நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவதற்கு இரக்கமுள்ள அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 24, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, பிணையமீட்பு என்றழைக்கப்படும் இரக்கமுள்ள அன்னை மரியா திருநாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ள திருத்தந்தை, மாண்பையும், சுதந்திரத்தையும் இழந்து துன்புறும் மக்களுக்காக மன்றாடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம், மற்றும், மாண்பு ஆகியவை மறுக்கப்பட்ட சூழலில், நவீனகால அடிமைமுறைக்குப் பலியாகியுள்ள நம் சகோதரர், சகோதரிகளின் துன்பங்களைப் புறக்கணியாதிருப்போம், அம்மக்களின் அடிமைச்சங்கிலிகளைத் தகர்தெறியவும், அவர்கள், மாண்புள்ள ஒரு வாழ்வு வாழ உதவவும் ஒன்றிணைந்து உழைப்பதற்கு, இரக்கமுள்ள  அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

Mercedarian துறவு சபை

இஸ்பெயின் நாட்டில், 1218ம் ஆண்டில், புனிதர்கள் பீட்டர் நொலாஸ்கோ, Penafortன் ரெய்மண்ட், Aragonனின் மன்னர் முதலாம் ஜேம்ஸ் ஆகிய மூவருக்கும், புனித கன்னி மரியா தனித்தனியே காட்சி கொடுத்தார். மூர் இனத்தவரால் கடத்தப்பட்டு, ஆப்ரிக்கச் சிறைகளில் வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை மறுதலிக்குமாறு சித்ரவதைப்படுத்தப்படுகின்றனர், அக்கிறிஸ்தவர்களை விடுவிப்பதற்காக, ஒரு துறவு சபையை துவக்குமாறு, அன்னை மரியா, அக்காட்சிகளில் கேட்டுக்கொண்டார்.

இந்த நோக்கத்திற்காக, 1218ம் ஆண்டில் புனித பீட்டர் நொலாஸ்கோ அவர்கள், Mercedarian துறவு சபையை உருவாக்கினார். அச்சபையின் உறுப்பினர்கள், இறைவேண்டல், பிணையல்மீட்புக்காக நிதி திரட்டுதல், சிறையில் அடிமைகளாகத் துன்புறும் கிறிஸ்தவர்களுக்குப் பதிலாக, தேவைப்பட்டால், தங்களைக் கையளித்தல் போன்றவை வழியாக, அன்னை மரியாவின் வேண்டுகோளை நிறைவேற்ற உறுதி எடுத்தனர். அச்சபையும், அன்னை மரியாவின் சிறப்புப் பாதுகாவலில் வேகமாக வளர்ந்தது. அடிமைப்படுத்தப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், பிணையல் தொகைகளால் மீட்கப்பட்டனர். இரக்கமுள்ள அன்னை மரியா திருநாள், செப்டம்பர் 24ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.  

முதுபெரும்தந்தை Raphaël Bedros

மேலும், இவ்வெள்ளி காலையில், அர்மேனியத் திருஅவையின் புதிய முதுபெரும்தந்தை சிலிசியாவின் Raphaël Bedros XXI Minassian அவர்களையும், அவரது அவையிலுள்ள ஆயர்களையும் சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் மடல் ஒன்றையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2021, 14:55