தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மனக்கவலைகளால் துயருறும் மக்களுக்காக மன்றாடுவோம்

தனிமை, நிச்சயமற்ற எதிர்காலம், தங்கள் குடும்பத்திற்கு ஆதரவளிக்கமுடியாநிலை, வேலையின்மை போன்ற பல்வேறு மனக்கவலைகளால் பலர் துயருறுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

எதிர்காலம் குறித்த நிச்சயமற்றதன்மை, வேலையின்மை உட்பட பல்வேறு காரணங்களால் துயருறும் அனைத்து மக்களுக்காகவும் இறைவனை மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 10, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் அழைப்புவிடுத்துள்ளார்.

செப்டம்பர் 10, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, தற்கொலை தடுப்பு உலக நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், “ஒன்றுசேர்ந்துசெபிப்போம்” (#PrayTogether) என்ற ஹாஷ்டாக்குடன், குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு காரணங்களால் மனக்கவலையால் துன்புறும் எல்லாருக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“தனிமை, நிச்சயமற்ற எதிர்காலம், குடும்பத்திற்கு ஆதரவளிக்கமுடியாநிலை, வேலையின்மை போன்ற பல்வேறு மனக்கவலைகளால் பலர் துயருறுகின்றனர், இவர்கள் எல்லாருக்காகவும் இன்று செபிப்போம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தற்கொலைகளையும், தற்கொலை முயற்சிகளையும் தடுப்பதற்கு உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, IASP எனப்படும், தற்கொலை தடுப்பு உலகளாவிய கழகத்தால், ஒவ்வோர் ஆண்டும்  செப்டம்பர் 10ம் தேதி தற்கொலை தடுப்பு உலக நாள் (WSPD) கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாண்டு தற்கொலை தடுப்பு உலக நாள், “செயல்திட்டம் வழியாக, நம்பிக்கையை உருவாக்குதல்” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த உலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள, IASP கழகத்தின் தலைவர் பேராசிரியர் Rory O'Connor அவர்கள், குடும்ப உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள், அரசியல் அதிகாரிகள், அரசுகள், கல்வியாளர்கள் போன்ற அனைவரும், தற்கொலைகளைத் தடுக்கவேண்டியதன் முக்கியத்துவம்பற்றி சிந்திக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

உலகில் இடம்பெறும் இறப்புக்களில் நூறில் ஒன்றுக்கு, தற்கொலையே காரணமாகும். 2019ம் ஆண்டில் அமெரிக்க கண்டத்தில், 97,339 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முயற்சி செய்தவர்களின் எண்ணிக்கை, இதைவிட இருபது மடங்காக இருந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2021, 15:23